கந்தர் அந்தாதி - செய்யுள் 45
தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே
பதம் பிரித்த வடிவம்:
தேசம் புகல அயிலே என சிறை புக்கு ஒரு கம்
தே சம்பு கல வண வாரி செற்றவன் ஈசர்க்கு
(உப) தேசம் புகல் அதிக வாசகன் சிறிது ஓர்கிலன்
(மா) தேசு அம்பு கலகம் உதவி மானை செரு செய்வதே
பொருள்:
தேசம் புகல அயிலே என சிறை புக்கு ஒரு கம் தே சம்பு
ஒரு கம் தே சம்பு சிறை புக்கு தேசம் புகல அயிலே என
ஒரு கம் தே சம்பு – ஐந்து தலைகளில் ஒரு தலையை இழந்த பிரம்மன்
சிறை புக்கு – சிறையிற்பட்டு
தேசம் – எனக்கு உறைவிடமும்
புகல – அடைக்கல ஸ்தானமும்
அயிலே என – வேலாயுதமே என்று முறையிடச் செய்தவனும்
எனக்கு உறைவிடமும் அடைக்கலமும் வேலாயுதமே என்று ஐந்து தலைகளில் ஒரு தலையை இழந்த பிரம்மன் முறையிடச் செய்தவனும்
கல வண வாரி செற்றவன்
கல – மரக்கலங்களும்
வண – அழகும் நிறைந்த
வாரி செற்றவன் – உக்கிர குமார பாண்டியனாக, வருணன் ஏவிய கடலை வற்றச் செய்தவனும்
மரக்கலங்களும் அழகும் நிறைந்த கடலை உக்கிர குமார பாண்டியனாக வந்து வற்றச் செய்தவனும்
ஈசர்க்கு உபதேசம் புகல் அதிக வாசகன்
ஈசர்க்கு – பரமசிவனுக்கு
உபதேசம் புகல் – பிரணவ உபதேசம் செய்த
அதிக வாசகன் – சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள்
சிவனாருக்குப் பிரணவத்தை உபதேசித்த சிறந்த மொழியை உடையவனுமாகிய கந்தக் கடவுள்
சிறிது ஓர்கிலன் மா தேசு அம்பு கலகம் உதவி மானை செரு செய்வதே
சிறிது ஓர்கிலன் – கொஞ்சங்கூட அறிந்தானில்லை
மா தேசு அம்பு – பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு
கலகம் உதவி – காமக் கலகத்தை ஏற்படுத்தி
மானை – மான் போன்ற தலைவியுடன்
செருச் செய்வதே – போர் புரிகின்றதை
(சிறிது ஓர்கிலன்)
பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, மான் போன்ற தலைவியுடன் கலகம் உண்டாக்கிப் போர் புரிகின்றதை கொஞ்சம் கூட அறிந்தானில்லை.
பொழிப்புரை:
ஒரு தலை பின்னப்பட்டவனான பிரம்மன் சிறையில் அடைக்கப்பட்டு, வேலாயுதமே எனக்கு சரணாகதி என்று சொல்லச் செய்தவரும், கடலை வற்றச் செய்தவரும், சிவனார் மனம் குளிர உபதேசம் செய்தவரும் ஆகிய முருகப் பெருமான் மன்மதனுடைய மாம்பூ வாளி இந்தப் பெண் மேல் தைத்துப் போர் புரிவதைத் தெரிந்துகொள்ளவில்லை.
பின் குறிப்பு:
பிரம்மனின் தலை அரிந்தது:
தானே பரம்பொருள் என்று கூறிச் சிவபிரானை இகழ்ந்த காரணத்தால் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்று வைரவரால் அறுக்கப்பட்டது.
“வயிரப் புத்தேள் பழித்திடும் அஞ்சாம் சிரத்தினை உகிரினாற் கொய்தான்” (காஞ்சிப் புராணம்)
“இகழ்ந்த உனைச் சென்னித்தலை கொண்டது தேர்கிலையோ” – கந்த புராணம்
.jpg)
Comments
Post a Comment