கந்தர் அந்தாதி - செய்யுள் 44

சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்

சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக

சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்


சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே


பதம் பிரித்த வடிவம்:


சேது ஆம் பலதுறை வேறும் பணி கங்கை செல்வ! நந்தன்

சே தாம்பு அலது உறையாத சிற்றாயன் திருமருக!

சேது ஆம்பலது உறை செவ்வாய்க் குறத்தி திறத்த!

(முத்திச்) சே தாம் பலதுறை ஈதென்று எனக்கு உபதேச நல்கே


பொருள்:


சேது ஆம் பலதுறை வேறும் பணி கங்கை செல்வ! 


சேது ஆம் - சேது முதலிய

பலதுறை வேறும் - மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும் 

பணி - வணங்குகின்ற

கங்கை செல்வ! - கங்காதேவியின் மைந்தனே! 


நந்தன் சே தாம்பு அலது உறையாத சிற்றாயன் திருமருக!


நந்தன் சேய் - நந்தகோபாலனின் பாலனாய் அவதரித்து 

தாம்பு அலது - வெண்ணெய் திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றாலன்றி

உறையாத - வேறெதற்கும் கட்டுப்படாத 

சிற்றாயன் - சிறு இடையனாகிய கிருஷ்ணமூர்த்தியின்

திருமருக! - செல்வ மருமகனே!


சேது ஆம்பலது உறை செவ்வாய்க் குறத்தி திறத்த!


சேது - சிவந்த

ஆம்பலது - ஆம்பல் பூ நிறம் போலும் 

உறை - உற்ற

செவ்வாய் - சிவந்த வாயை உடைய 

குறத்தி திறத்த! - வள்ளி மணாளனே!


முத்திச் சே தாம் பலதுறை ஈதென்று எனக்கு உபதேச நல்கே


முத்திச் சே - மோக்ஷத்திற்கும் எனக்கும் இடையே உள்ள பெரிய தூரத்தை

தாம் - தாண்டக்கூடிய

பலதுறை - நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய மார்க்கம்

ஈதென்று - இதுவே என்று 

எனக்கு உபதேச நல்கே - எனக்கு நீ உபதேசம் செய்வாயாக.


பொழிப்புரை:


கங்கையின் மைந்தனே! திருமால் மருகனே! வள்ளி நாயகனே! எதற்கும் தூரமாய் இருக்கின்ற முத்தி வீட்டை அடையும் நல்வழியை நீ எனக்கு உபதேசிக்க வேண்டும்.

Comments