கந்தர் அந்தாதி - செய்யுள் 43
செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்
செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே
பதம் பிரித்த வடிவம்:
செய்ய செம் தாமரை இல்லாது அ மாதுடன் செந்தினைசூழ்
செய் அசெம் தா மரை மான் ஆர் சிலம்பில் கலந்துறையும்
செய்ய! செம் தாமர் ஐ என்னும் குமார! சிறு சதங்கை
செய்ய செந்தாமரை சேர்வது என்றோ? வினை சேய் தொலைத்தே
பொருள்:
செய்ய செம் தாமரை இல்லாது அ மாதுடன்
செய்ய - தினை விளையும் நிலத்தை உடைய
செம் - ஒழுங்கான
தாமரை - சிறுகுடி எனும் நகரத்தாருக்கு
இல்லாது - தெரியாமல்
அ மாதுடன் - அந்தத் தினைப்புனத்தில் காவல் செய்த வள்ளி நாயகியுடன்
செந்தினைசூழ் செய் அசெம் தா மரை மான் ஆர் சிலம்பில் கலந்துறையும் செய்ய!
செந்தினை சூழ் செய் - சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த
அசெம் - ஆடு
தா மரை - தாவுகின்ற கடம்பை எனும் மான் கூட்டம்,
மான் - மற்றும் வேறு ஜாதி மான்கள்
ஆர் - நிரம்பி இருக்கும்
சிலம்பில் - குன்றில்
கலந்துறையும் - அவளைக் கந்தர்வ மணம் செய்து கொண்ட
செய்ய! - கந்தக் கடவுளே!
செம் தாமர் ஐ என்னும் குமார!
செம் தாமர் - அழகிய கொன்றை மாலையைத் தரித்துள்ள சிவபெருமான்
ஐ என்னும் குமார! - ஐயனே என்று போற்றுகின்ற குமாரக் கடவுளே!
சிறு சதங்கை செய்ய செந்தாமரை சேர்வது என்றோ? வினை சேய் தொலைத்தே
சிறு சதங்கை - சிறிய சதங்கை அணிந்த
செய்ய - அழகிய
செந்தாமரை - சிவந்த திருவடித்தாமரை
சேர்வது என்றோ? - நான் அடைவது எக்காலம்?
வினை சேய் தொலைத்தே - இருவினைகளையும் தொலைவில் நீக்கிவிட்டு
பொழிப்புரை:
மலைக் குறவருக்குத் தெரியாமல், தினைப்புனத்தில் வள்ளியைப் புணர்ந்தவனே! கொன்றை வேந்தராகிய ஈசனார், ஐயனே என்று துதிக்கின்ற குமரனே! இருவினைப் பரப்பைக் கடந்து உன் திருவடியை நான் அடையும் காலம் என்றைக்கு வருமோ?
பின் குறிப்பு:
முருகன் திருவடியைக் கூடுதற்கு விரும்புதல் –
- ‘உய்யும் வகை அறியேன் மலர்த்தாள் தருவாய்’ – கந்தர் அலங்காரம் 41
- ‘தண்டையம் புண்டரிகம் தருவாய்’ – கந்தர் அலங்காரம் 92
- ‘இருதாள் வனசம் தர என்றிசைவாய்’ – கந்தர் அநுபூதி 21
- ‘கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்’ – கந்தர் அநுபூதி 35
.jpg)
Comments
Post a Comment