கந்தர் அந்தாதி - செய்யுள் 42
தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே
பதம் பிரித்த வடிவம்:
தீ நந்து இனத்து உதரச் செல்வர் பால் சென்று எனக்கு என்பது ஓர்
தீனம்; தினத்தும் உதரானலம் சுடச் சேர்ந்து சுடும்;
தீ நம் தினத்துனி களை செங்கோட்டினன் செந்தில் அம் நீர்
தீன் நந்தின் அத்து உதவு துப்பு இரசதம் செய்ய வற்றே
பொருள்:
தீ நந்து இனத்து உதரச் செல்வர் பால் சென்று எனக்கு என்பது ஓர் தீனம்
தீ நந்து இனத்து – புத்திகெட்ட கூட்டத்தினரிடை
உதரச் செல்வர் பால் சென்று – உதார குணமுடையவர்கள் என்று பேசப்படும் செல்வந்தர்களிடம் சென்று
எனக்கு என்பது – எனக்கு ஏதாவது தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைப்பது
ஓர் தீனம் – மிகவும் கொடிதான வறுமை
தினத்தும் உதரானலம் சுடச் சேர்ந்து சுடும்
தினத்தும் – தினந்தோறும்
உதரானலம் சுட – வயிற்றில் பசியாகிய அக்னி எரியும்போது
சேர்ந்து சுடும் – அதனுடன் சேர்ந்து என்னைத் தகிக்கின்றது
தீ நம் தினத்துனி களை செங்கோட்டினன் செந்தில் அம் நீர்
தீ – தீமையாகிய
நம் – நம்மை
தினத்துனி களை – நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை நீக்க வல்ல
செங்கோட்டினன் – செங்கோட்டு வேலவனின்
செந்தில் அம் நீர் – செந்திலம்பதியிலுள்ள புண்ணிய தீர்த்தமானது
தீன் நந்தின் அத்து உதவு துப்பு இரசதம் செய்யவற்றே
[அத்து உதவு துப்பு தீன் நந்தின் இரசதம் செய்யவற்றே] என்று மாற்றிப் பொருள் கொள்ளலாம்.
அத்து உதவு - சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்ற
துப்பு – பவளத்தைப் போன்ற இதழை
தீன் நந்தின் – இனிய சங்கைப் போல
இரசதம் செய்யவற்றே? – ரசவாதம் செய்து வெண்மை நிறமாக மாற்ற வல்லதோ?
பொழிப்புரை:
செங்கோட்டு வேலவனின், செந்திலம்பதியிலுள்ள நீர் நமக்கு தினந்தோறும் பசியாகிய அக்னியை அணைக்கவல்லதாயினும், பவளம் போன்ற சிவந்த இதழை ரசவாதம் செய்ததுபோல் வெண்மையாக்க வல்லதோ?
பின் குறிப்பு:
தலைவி தன் களவொழுக்கத்தை மறைப்பதற்காக “சுனையில் நீராடி வந்தேன்”, என்று சொல்ல, “சுனைநீர், சிவந்த பவளம் போன்ற உதடுகளை வெளுக்க வைக்குமோ?” என்று கேலியாகக் கேட்கிறாள் தோழி. “சுனைநயந்துரைத்தல்” எனும் துறையைச் சேர்ந்தது இச்செய்யுள்.
“கடைக்கண் சிவந்து இதழொன்றே வெளுப்ப…. மலர்க்குழலாய்! சுனை யாதினுள் தோய்ந்தனையே” – வெங்கைக்கோவை
“மைவிழி சிவப்பவும், வாய் வெளுப்பவும் காட்டும் தண்சுனை எவ்விடை இருந்துளது இயம்புவாய்” – கந்த புராணம்.
கந்தர் அந்தாதி செய்யுள் 42 விளக்கவுரை
.jpg)
Comments
Post a Comment