கந்தர் அந்தாதி - செய்யுள் 41

தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே

பதம் பிரித்த வடிவம்:

தெண்டன் புரந்து அரவக் குன்றில் வாழ் கந்த! சிந்துவில்
(உத்)தெண்டன் புரந்தர லோகம் செறாது செற்றோய்! களைவாய்
தெண்டன் புரந்தர் அம் நற்கேள் சிறுவர் அழச்செய்து எம்மைத்
தெள் தன் புரம் தரவின் படி நூக்கிய தீ நரகே

பொருள்:

தெண்டன் புரந்து 

தெண்டன் – விழுந்து வணங்குகின்றேன்

(புரந்து – என்னைக் குறைவறக் காத்து)

அரவக் குன்றில் வாழ் கந்த!

அரவக்குன்றில் வாழ் கந்த – நாகாசலம் எனும் திருச்செங்கோட்டு மலையில் வாழ்பவனே!


சிந்துவில் உத்தெண்டன் புரந்தர லோகம் செறாது செற்றோய்!

சிந்துவில் – சமுத்திரத்தின் கண்

உத்தெண்டன் – மகா பலசாலியான சூரபத்மனை

புரந்தர லோகம் செறாது – இந்திர லோகத்தை அழிக்காதபடி

செற்றோய் – வதைத்தவனே!

செங்கோட்டு வேலவனே! சமுத்திரத்தில் வாழும் மகா பலம் பொருந்திய சூரபத்மன் இந்திரலோகத்தை அழிக்காதவாறு, அவனை வதைத்தவனே! உன்னை விழுந்து வணங்குகின்றேன்.

களைவாய் தெண்டன் புரந்தர் அம் நற்கேள் சிறுவர் அழச்செய்து எம்மைத் தெள் தன் புரம் தரவின் படி நூக்கிய தீ நரகே

(களைவாய் – நீக்குவாய்)

தெண்டன் – தண்டாயுதத்தை உடைய யமன்

புரந்தர் – தொன்றுதொட்டு வந்து

அம் நற்கேள் – அழகிய நல்ல சுற்றத்தாரும்

சிறுவர் – பிள்ளைகளும்

அழச்செய்து எம்மை – என் உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு அழும்படிச் செய்து

தெள் தன் புரம் – தெள்ளிய தன்மை உடைய தன் ஊராகிய எமபுரத்திற்குக் கூட்டிச் சென்று

தரவின் படி – தனது உத்தரவின் படி

நூக்கிய – சென்று நுழைக்கும் (தள்ளுதற்கு இடமாகிய)

தீ நரகே – நரகாக்னியை (யமபயத்தை)

(களைவாய் – நீக்குவாய்)

தண்டத்தை உடைய யமன், என் சுற்றத்தாரும் பிள்ளைகளும் என் உடலைச் சுற்றி அமர்ந்துகொண்டு, அழும்படிச்செய்து, தன் ஊராகிய எமபுரத்திற்கு என்னை இழுத்துச்சென்று தள்ளும் அந்த பயத்தை நீக்குவாய்.

[புரந்து தீநரகே களைவாய் – என்னைக் காத்து, நரகாக்னியில் நான் விழுந்துவிடாதபடி அதை நீக்குவாய் என்று இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும்].

பொழிப்புரை:

செங்கோட்டு வேலவனே! இந்திர லோகம் அழிந்துவிடாதபடி சூரனை அழித்தவனே! உன்னைத் தெண்டனிட்டு வணங்குகிறேன். என் சுற்றத்தாரும் பிள்ளைகளும் சூழ்ந்து கொண்டு அழும்படியாக எமன் என் உயிரைப் பிரித்து தன் லோகத்திற்குக் கொண்டுபோய் நரகாக்னியில் தள்ளாமல் என்னைக் காத்தருள வேண்டும்.

[அவரது இவ்வேண்டுகோளை நாகாசல வேலவன் ஏற்றுக்கொண்டான் என்பதை, கந்தர் அநுபூதியில், “கூ கா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா, நாகாசல வேலவ!” என்று பாடியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கந்தர் அநுபூதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே திருத்தலம் – நாகாசலமே]

கந்தர் அந்தாதி செய்யுள் 41 விளக்கவுரை 



Comments