கந்தர் அந்தாதி - செய்யுள் 40

சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்

சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்

சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்

சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே


பதம் பிரித்த வடிவம்:

சேம ரவிக்கு அம் படையாக வீசு உபதேசம் முன்னூல்

சேமர் அவிக்கு அம் பலம் தருவாய்; செருவாய வெஞ்சூர்

சே மர விக்கம் திரித்தாய்; வருத்திய அன்றில் தென்றல்

சே மர இக்கு அம்புய வாளி விண்டு இரை தெண்டிரையே


பொருள்:

இப்பாடலில், முருகனைப் பிரிந்திருப்பதால் துயருறும் பெண், எவையெல்லாம் தன் துயரை அதிகரிக்கின்றன என்று கூறுகிறாள்.


சேம ரவிக்கு அம் படையாக வீசு உபதேசம் முன்னூல் சேமர் அவிக்கு அம் பலம் தருவாய்

சேம ரவிக்கு – சிவந்த சூரியனுக்கு

அம் படையாக வீசு – நீரை அசுரரது தடையை விலக்கும் ஆயுதமாக இறைக்கின்ற

உபதேசம் முன்னூல் – உபதேசத்தையும், முப்புரி நூலையும்

சேமர் அவிக்கு – காப்பவர்களாகிய அந்தணர் அளிக்கும் அவிர்பாகத்திற்கு

அம் பலம் தருவாய் – அழகிய நற்பயனை அளிப்பவனே!


சூரியன் உதிப்பதை தடை செய்யும் அசுரர்களை விலக்க, நீரை இறைக்கும் அந்தணர் நடத்தும் யாகத்திற்கு நற்பயன் அளிப்பவனே!


செருவாய வெஞ்சூர் சே மர விக்கம் திரித்தாய்

செருவாய வெஞ்சூர் – போர் செய்யும் கொடிய சூரனாகிய

சே மர விக்கம் – வயிரம் பொருந்திய மாமரத்தினால் தேவர்கட்குண்டாய விக்னம்

திரித்தாய் – ஒழித்தவனே!

 

போர் செய்வதில் வல்லவனும் மாமரமாய் நின்றவனுமான சூரனால் தேவர்களுக்கு உண்டான விக்கினத்தை ஒழித்தவனே!


வருத்திய அன்றில் தென்றல் சே மர இக்கு அம்புய வாளி விண்டு இரை தெண்டிரையே

வருத்திய – என்னைத் துன்புறுத்துகின்ற

அன்றில் – (காம சின்னமாகிய) அன்றில் பட்சியும்

தென்றல் – காமனது தேராகிய தென்றல் காற்றும்

சே – (கழுத்து மணி ஒலிப்பதனால்) ரிஷபமும்

மர இக்கு – கரும்பு வில்லும்

அம்புய வாளி – தாமரைப் பூவாகிய மன்மதனுடைய பாணமும்

விண்டு – ஆர்ப்பரித்து

இரை – முழங்குகின்ற

தெண்டிரையே – தெளிந்த திரையை உடைய கடலுமே

[என்னை வருத்துகின்றன]


என்னை வருத்துபவை – அன்றில் பறவை, தென்றல் காற்று, காளையின் கழுத்தில் ஒலிக்கும் மணி, கரும்பு வில், தாமரை மலராகிய அம்பு, கடல்.


பொழிப்புரை:

சூரியனுக்கு அம்பாக சந்தியாவந்தனம் செய்யும் முப்புரி நூல் அணிந்த வேதியரின் வேள்விக்குத் தக்க பலன் அளிப்பவனே! மாமரமாய் நின்ற சூரனை வென்றவனே! காளையின் மணியோடு காமனது சின்னங்களாகிய அன்றிலும், தென்றலும், கரும்பும், தாமரைப்பூவும், கடலும் என்னை வருத்துகின்றன.

Comments