கந்தர் அந்தாதி - செய்யுள் 38

சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்

சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க் குப்பரி

சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்

சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே

 

பதம் பிரித்த வடிவம்:

சிற்றம்பலத்து ஐயர் அன்பு நெய், நூல் திரி, சிந்தை இடும்

சில் தம்ப லத்தை வர ஞான தீபம் இட்டார்க்குப்

(பரி)சில் தம் பலத்தை அருளும் செந்தூரர் பகைக்குலமாம்

சிற்றம்பு அலத் தைப்பது அவர் அம் தோளில் இந்தீவரமே

 

பொருள்:

சிற்றம்பலத்து ஐயர் அன்பு நெய், நூல் திரி, சிந்தை இடும் சில்

சிற்றம்பலத்து ஐயர் - ஞான வெளியாய் இருக்கும் சுவாமிக்கு

அன்பு நெய் – பக்தி எனும் நெய்யை வார்த்து

நூல் திரி – ஆகம நூல் எனும் திரியை

சிந்தை இடும் சில் – இதயமாகிய தீபமேற்றும் தகழியிலிட்டு

ஞானமே வடிவாய் இருக்கும் இறைவனுக்கு பக்தி எனும் நெய், ஆகம நூலாகிய திரி ஆகியவற்றை இதயமென்னும் தகழியில் இட்டு

 

தம்ப லத்தை வர ஞான தீபம் இட்டார்க்கு

தம்ப – ஆன்மாவுக்குப் பற்றுக்கோடாகிய

லத்தை வர – கிருபை உண்டாகும் பொருட்டு

ஞானதீபம் இட்டார்க்கு – மெய்ஞ்ஞான தீபத்தை ஏற்றிய அடியார்களுக்கு

ஆன்மாவின் பற்றுக்கோடாம் க்ருபை உண்டாவதற்காக ஞானதீபத்தை ஏற்றும் அடியார்களுக்கு

 

பரிசில் தம் பலத்தை அருளும்

பரிசில் – பரிசாக

தம் பலத்தை அருளும் – தமது சாயுஜ்யம் எனும் பலனை க்ருபை செய்கின்ற

பரிசாக, சாயுஜ்ய பதவியை அருளுகின்ற

 

செந்தூரர் பகைக்குலமாம் சிற்றம்பு அலத் தைப்பது

செந்தூரர் – திருச்செந்தில் நாயகருமாகிய கந்த சுவாமியின்

பகைக்குலமாம் – சத்ருக்களாகிய அசுரகுலத்தை வேரறுத்த

சிற்றம்பு அல தைப்பது – சிறிய பாணமல்ல என் இதயத்தில் தைத்து வருத்துவது

செந்திலாண்டவனின் வேல் அல்ல என் இதயத்தை வருத்துவது.

 

அவர் அம் தோளில் இந்தீவரமே

அவர் - அவருடைய

அம் தோளில் - அழகிய புயத்தில் அணிந்த

இந்தீவரமே - நீலோற்பலமாகிய பாணமே (என்னை தைத்து வருத்துகிறது)

அவருடைய தோள்களில் அணிந்துள்ள நீலோத்பல மலரே என்னை வருத்துகிறது. 


பொழிப்புரை:

இருதயத்தைத் தகழியாக்கி, அன்பெனும் நெய்யை வார்த்து, ஆகமநூலாகிய திரியை இட்டு, ஞானத்தை விளக்காக ஏற்றிய அடியார்களுக்கு, சிதாகாசமான சாயுஜ்ய பதவியை அருளுகின்ற திருச்செந்திலாண்டவன் சத்ரு சம்ஹாரம் செய்த பாணமிருக்க, அவர் புயத்தில் அணிந்துள்ள நீலோற்பல மாலையே மன்மதன் பாணங்களுள் ஒன்றாக என் ஆகத்தில் தைத்து வருத்துகிறது. [இந்த ஆத்மாவானது முருகன் அருளுக்காக ஏங்குகிறது என்பது உட்கருத்து]

 

இறைவன்பால் நம் உள்ளத்தில் இருக்கும் அன்பை தகழியாகவும், அவனை வணங்க வேண்டும் என்ற ஆர்வத்தை நெய்யாகவும், அவன்மேல் கொண்ட பக்தியால் உருகும் இதயத்தை திரியாகவும் வைத்து, நம் ஆன்மா உருக ஞான விளக்கு ஏற்றினேன் என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தை இக் கந்தர் அந்தாதிச் செய்யுளோடு ஒப்பு நோக்கலாம்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

(பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி)

Comments