கந்தர் அந்தாதி - செய்யுள் 37

சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்

சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்

சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்

சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே

 

பதம் பிரித்த வடிவம்:

சீர்க்கை வனப்பு மலர் வேங்கையானவன்; செஞ்சிலையோர்

சீர்க் கை வனப் புனிதத் தவ வேடன்; தினை வளைக்கும்

சீர்க்கு ஐவனப் புனமது உருக்காட்டிய சேய்; தமிழ்நூல்

சீர்க்கு ஐ; வனப் புல் நிமிர் சடையோன் மகன் சிற்றடிக்கே

 

பொருள்:

இப்பாடலில் முருகப்பெருமானின் திருவடித் தாமரையை அடைவதற்கு நம் மனத்தைச் செலுத்துதலே அழகாகும் என்று பாடுகிறார்.

 

சீர்க்கை வனப்பு

சீர்க்கை – மனம் திருந்துதல்

வனப்பு – அழகாகும்

எதை நோக்கி மனம் திருந்துதல் அழகு?


மலர் வேங்கையானவன் 

மலர் – புஷ்பங்களை உடைய

வேங்கையானவன் – வேங்கை மரமாய் நின்றவனும்

 

செஞ்சிலையோர் சீர்க் கை வனப் புனிதத் தவ வேடன்

சென்சிலையோர் – அழகிய வில்லை உடைய குறவர்கள்

சீர் – சந்தேகப்பட்ட தன்மையை

கை – கோபித்து

வன – வனத்தில்

புனித – பரிசுத்தமான

தவ வேடன் – தவ வேடம் கொண்டவனும்


தினை வளைக்கும் சீர்க்கு ஐவனப் புனமது உருக்காட்டிய சேய்\ 

தினை வளைக்கும் – தினைப்புனத்தைக் காக்கின்ற

சீர்க்கு – சிறந்த வள்ளி நாயகிக்கு

ஐவனப் புனமது – மலைநெல் விளைகின்ற புனத்தின்கண்

உருக்காட்டிய சேய் – தன் நிஜ சொரூபத்தைக் காட்டிய குமரனும்


தமிழ்நூல் சீர்க்கு ஐ 

தமிழ் நூல் சீர்க்கு – இயல் தமிழ் நூலுக்குரிய முப்பது சீருக்கும்

ஐ – தலைவனான புலவனும்


வனப் புல் நிமிர் சடையோன் மகன் சிற்றடிக்கே 

வன – கங்கையையும்

புல் – அறுகையும் அணிந்த

நிமிர்  - நீண்ட

சடையோன் – சடாபாரத்தை உடைய பரமசிவனது

மகன் – மைந்தனுமாகிய முருகக் கடவுளது

சிற்றடிக்கே – சிறிய திருவடித் தாமரைகளை அடைதற்கே (சீர்க்கை வனப்பு – மனம் திருந்துதல் அழகு)


பொழிப்புரை: 

வேங்கை மரமாக நின்றவனும், குறவர்கள் ஐயம் கொண்டதால் அவர்கள் மேல் கோபங்கொண்டு தவ வேடம் பூண்டவனும், தினைப்புனத்தில் வள்ளி நாயகிக்குத் தன் சுயரூபத்தைக் காட்டியவனும், இயல் தமிழ் நூலுக்குரிய சீர்களுக்குத் தலைவனானவனும் சிவபெருமானின் மகனுமாகிய முருகக் கடவுளின் அழகிய திருவடித் தாமரைகளை அடைதற்கே மனம் திருந்துதல் அழகாகும்.

[ஐவன வெற்பில் வஞ்சி கணவா – சிகரிகள் இடிய – வெள்ளிகரம் திருப்புகழ்]


முப்பது சீர் –

ஓரசைச் சீர் – நாள், மலர் (2)

ஆசிரிய உரிச்சீர் / ஈரசைச் சீர் – தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் (4)

வெண்பா உரிச்சீர் / மூவசைக் காய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் (4)

வஞ்சி உரிச்சீர் / மூவசைக் கனிச்சீர் – தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி (4)

பொதுச்சீர் / நாலசைச்சீர் – தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ, தேமாநறும்பூ, புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளநறும்பூ, தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், தேமாநறுநிழல், புளிமாநறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்

ஆக – 2+4+4+4+16 = 30 சீர்கள்

Comments