கந்தர் அந்தாதி - செய்யுள் 36

செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்

செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ

செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்

செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே


பதம் பிரித்த வடிவம்:

செச்சைய! வாவு இகல் அயில் வல் வாயிடைச் சேடன் நிற்கச்

செ சைய ஆவி பருகும் சிகாவல! செம் கை வெம் தீ

செச்சைய வாவி விடுக எனும் செல்வ! நின் தாள் அணுகச்

செ சை அவாவின் உயிர் வாழ்வு இனி அலம் சீர்ப்பினுமே


பொருள்:

செச்சைய! 

செச்சைய – வெட்சிமாலை உடையவனே!


வாவு இகல் அயில் வல் வாயிடைச் சேடன் நிற்க செ சைய ஆவி பருகும் சிகாவல!

வாவு – தாவுதலும்

இகல் – பகையும்

அயில் – கூர்மையும் (பொருந்திய)

வல் வாயிடை – வலிய வாயினிடத்தில்

சேடன் நிற்க – பாம்பு இருக்க

செ – சிவந்த

சைய – மலையின்கண்

ஆவி பருகும் – அதனுயிரை உண்ணுகின்ற

சிகாவல – மயில் வாகனனே!


தாவுதலும், பகையும், கூர்மையும் பொருந்திய வலிய வாயிடத்தில் பாம்பு இருக்க, சிவந்த மலையின்கண் அதன் ஆருயிரை உண்ணுகின்ற மயில் வாகனனே!


செம் கை வெம் தீ செச்சைய வாவி விடுக எனும் செல்வ! 

செம் கை – சிவந்த கரத்திலேந்தி

வெம் – வெவ்விய

தீ – அனல் பொறியை

செச்சைய – (ஆட்டு வாகனத்தை உடைய) அக்னி தேவ!

வாவி விடுக – ‘சரவணப் பொய்கையில் விடுக’

எனும் – என்று பரமசிவன் கூறியபடி (விட்டதில் வளர்ந்த)

செல்வ – பாலகனே!


பரமசிவனிடத்திருந்து தோன்றிய வெப்பமிகுந்த தீப்பொறியை, ”அக்னிதேவனே, சரவணப் பொய்கையில் விடுக” என்று அவர் கூறியவாறு அங்கே விட்டதில் வளர்ந்த பாலகனே!


நின் தாள் அணுகச் செ 

நின் தாள் – உன் திருவடிகளை

அணுகச் செ – நாங்கள் அடைய க்ருபை செய்வாயாக


உன் திருவடிகளை நாங்கள் அடைய அருள்செய்வாய்


சை அவாவின் உயிர் வாழ்வு இனி அலம் சீர்ப்பினுமே

சை – இகழ்வதற்கிடமான

அவாவின் – ஐம்புல ஆசையால்

உயிர் வாழ்வு – உயிரோடு வாழ்வது

இனி அலம் – இனி போதும்

சீர்ப்பினுமே – செல்வம் அதிகரிக்கினும் (சை வாவின் உயிர் வாழ்வு இனி அலம்)

செல்வம் அதிகம் கிடைக்கப்பெற்றாலும், இகழ்வதற்குரியதான ஐம்புல ஆசையால் உயிருடன் வாழ்வது இனி போதும்.


பொழிப்புரை:

வெட்சி மாலை உடையவனே! பாம்பின் உயிரை உண்ணும் மயில் வாகனனே! பரமசிவனிடத்தில் அனல் பொறியாய்த் தோன்றி, அக்னி தேவனால் சரவணப்பொய்கையில் விடப்பட்டு வளர்ந்த பாலகனே! இனி நாங்கள் மிகுந்த செல்வம் அடையினும் அவ்வாசையில் அழுந்தி உடலை ஓம்போம். நின் திருவடியில் சேர்த்துக்கொள்.

Comments