கந்தர் அந்தாதி - செய்யுள் 35
திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு
திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே
பதம் பிரித்த வடிவம்:
திருத்துளவார் இகல் போதுடன் சேண் மழை தூங்கும்
(சங்கது) இருத்துள வாரிதி கண் துயிலா; செயல் மாண்ட சிந்தை
திருத்துள ஆர்? அன்னை செந்தூரை அன்னள்; செம்மேனி என்பு
(உ)திருத்துள வார் சடை ஈசர் மைந்தா! இனிச் செச்சை நல்கே
பொருள்:
இப்பாடல், செந்திலாண்டவனைப் பிரிந்து, விரக தாபத்தால் வாடும் பெண், அவன் அணிந்துள்ள செச்சை மாலையைத் தனக்கு இனியாவது அருள வேண்டும் என்று அவனிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. தன் அன்னையும் செந்திற்பதியும் முருகனிடம் தன்னைச் சேரவிடாமல் ஒன்று போல் செயல்படுகின்றனர் என்று உவமித்துக் கூறுகிறாள்.
திருத்துளவார் இகல் போதுடன் சேண் மழை தூங்கும்
திருத்துளவார் – துளசி மாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன்
இகல் – போட்டி போடுகின்ற
போதுடன் – மாலைக் காலத்தோடு
சேண் – விண்ணிலிருந்து
மழை தூங்கும் – மழை விடாமல் பெய்கிறது
துளசிமாலை அணிந்த திருமாலின் கரிய நிறத்துடன் போட்டி போடும் இருண்ட மாலைக்காலத்தில் வானிலிருந்து மழை விடாமல் பொழிகிறது.
சங்கது இருத்துள வாரிதி கண் துயிலா
சங்கது இருத்துள – சங்குக் கூட்டங்கள் வசிக்கின்ற
வாரிதி - சமுத்திரம்
கண் துயிலா – இடைவெளி இல்லாமல் முழங்குகின்றது
சங்குகளின் இருப்பிடமான கடல், ஓயாமல் ஓசை எழுப்பி வருகின்றது.
செயல் மாண்ட சிந்தை திருத்துள ஆர்?
செயல் மாண்ட சிந்தை – இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்ம்மறந்து இருக்கும் என் மனத்திற்கு
திருத்துள ஆர் – ஆறுதல் அளிப்பதற்கு யார் உரியவர்?
பிரிவாற்றாமையால் மெய்ம்மறந்த என் மனத்திற்கு யார் ஆறுதல் அளிப்பார்கள்?
அன்னை செந்தூரை அன்னள்
அன்னை – பெற்ற தாயும்
செந்தூரை அன்னள் – செந்தில் பதியைப் போல் உள்ளாள்
என் அன்னையும் செந்தூரும் ஒன்றாய் விளங்குகின்றனர்.
[முருகனிடம் நான் செல்வதை என் அன்னை தடுக்கிறாள்; செந்தில் நகரோ, முருகனை என்னிடம் வரவிடாமல் தடுக்கிறது. ஆகையால் இருவரும் ஒன்று போல் செயல்படுகின்றனர்.]
செம்மேனி என்பு உதிருத்துள வார் சடை ஈசர் மைந்தா! இனிச் செச்சை நல்கே
செம்மேனி – சிவந்த மேனியில்
என்பு – எலும்பு மாலையும்
உதிருத்துள – உதிர்கின்ற விபூதிப்பொடியும் படிய
வார் சடை ஈசர் – நீண்ட ஜடாபாரத்தை உடைய ஈசனது
மைந்தா – குமரனே!
இனி – இனியும் என்னால் விரகதாபத்தைத் தாங்க முடியாததால்
செச்சை நல்கே – உன் வெட்சி மாலையை எனக்குத் தந்தருள்வாயாக!
சிவந்த மேனியில் எலும்பு மாலை, திருநீறு ஆகியவற்றைப் பூசியவரும், நீண்ட ஜடையை உடையவருமான ஈசனுடைய மகனே! விரகதாபத்தால் அவதிப்படும் எனக்கு, இனி உன் வெட்சி மாலையைத் தந்தருள்வாயாக.
பொழிப்புரை:
திருமேனியில் திருநீறும் எலும்பும் அணிந்த ஜடாதாரியாகிய சிவனின் குமரனே! மழைக்காலமும் மாலைப் பொழுதும் சேர்ந்திருக்கின்றன. சமுத்திரம் ஓயாமல் முழங்குகின்றது. என்னைத் தேற்றுபவர் யார்? பெற்ற தாயோ என்னை முருகனிடம் போகவிடாமல் தடுத்து, எனக்குப் பகையாக இருக்கிறாள். திருச்செந்தூரும் முருகனை என்னிடம் வரவிடாமல் அங்கேயே தங்க வைத்துக்கொண்டு துவேஷம் காட்டுகிறது. ஆகையினால் அன்னையும் செந்திலும் எனக்குப் பகையாளிகளாக இருக்கின்றனர். என்னால் இப்பிரிவைத் தாங்கமுடியாததால் இனி, நீ தரித்திருக்கும் மாலையைத் தந்தருள வேண்டும்.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
[திருச்செந்தூர்த் திருப்புகழ்]
.jpg)
Comments
Post a Comment