கந்தர் அந்தாதி - செய்யுள் 33
சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
சேதனந் தந்துறை
யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
சேதனந் தந்துறை
யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
சேதனந் தந்துறை
மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே
பதம் பிரித்த வடிவம்:
சே தனம் தந்து உறு
ஐ என்று உமை செப்பும் குருந்து உறை
(காற்)சேது அனம்
தந்து உறை அல்லி மன் வாவிச் செந்தூர் கருது
(அ)சேதனம் தம் துறை
என்று அறியார் திறம் நீங்கி நெஞ்சே
சேது அநந்தம் துறை
மற்றும் உற்றாடித் திரிகைவிட்டே
பொருள்:
சே தனம் தந்து உறு ஐ
சே - அழகிய
தனம் தந்து – திருமுலைப்பால் ஊட்டி
உறு ஐ - பெரும் பாக்கியம் கிடைத்த என் ஐயன்
என்று உமை செப்பும் குருந்து உறை
என்று உமை செப்பும்
- என்றெல்லாம் பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற
குருந்து உறை – குழந்தை நீங்காமல் வசிக்கின்றதும்
காற்சேது அனம் தந்து உறை அல்லி மன் வாவிச் செந்தூர் கருது
காற்சேது அனம் – சிவந்த காலை உடைய அன்னப் பட்சிகளும்
தந்து உறை அல்லி – நூல் போன்ற தண்டுடைய ஆம்பல் பூக்களும்
மன் வாவி – அகலாதிருக்கின்ற தடாகங்கள் சூழ்ந்ததுமான
செந்தூர் கருது
– திருச்செந்திற்பதியை நீ சிந்தை செய்வாயாக
அசேதனம் தம் துறை என்று அறியார் திறம் நீங்கி
அசேதனம் - அறிவின்மை
தம் துறை - தங்கள்
சமயக் கோட்பாடுகள்
என்று அறியார் திறம் நீங்கி - என்று தெளியாமல் உழலும் பரசமயவாதிகளின் கூட்டத்தை நீங்கி
நெஞ்சே – மனமே!
சேது அநந்தம் துறை மற்றும் உற்றாடித் திரிகைவிட்டே - சேது
முதலான மற்ற சமுத்திரங்களிலும் அநேக நதிகளிலும் மீண்டும் மீண்டும் சென்று நீராடுவதை
விடுத்து [செந்தூர் கருது, மனமே!]
பொழிப்புரை:
நெஞ்சமே! தங்கள்
சமயக் கோட்பாடுகள் அறிவின்மையானவை என்று உணராத பரசமயவாதிகளுடன் சேராமலும், தீர்த்தாடனத்தில்
மட்டுமே நேரத்தைச் செலுத்தாமலும், உமை பாலகனான கந்தக் கடவுளின் சாந்நித்தியத்துடன்
இருக்கும் செந்தூரைத் தியானிப்பாயாக.
[ஆன்மிக மார்க்கத்தின் முக்கியப் படிகளான க்ஷேத்ராடனம், புண்ணிய நதிகளில் நீராடுவது, இவையெல்லாம் பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் தேவையில்லை. அவற்றை விட்டுவிட்டு, முருகன், அசுர ரூபத்திலிருந்த மும்மலங்களையும் அழித்த செந்தூரையும் அவன் அங்கு நடத்திய திருவிளையாடல்களையும் தியானம் செய்ய வேண்டும்.]
.jpg)
Comments
Post a Comment