கந்தர் அந்தாதி – செய்யுள் 31

தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்

தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்

தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த

தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே

 

பதம் பிரித்த வடிவம்:

தீதா வசவு அனுபவிக்க மண்ணிலும் விண்ணிலும்

(செந்)தீ தாவு அச அனியாயம் செய் வேதியரே தியங்கா

தீ தா வசவ நிமலர் செல்வா சாக்கிரவசத்து

(அ)தீதாவச அன்புறப்பார் எனும் முத்தி சித்திக்கவே


பொருள்:

இப்பாடலில், முக்தி அடைய விரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

தீதா வசவு அனுபவிக்க மண்ணிலும் விண்ணிலும்

தீதா – தீமையாகிய பொல்லாங்கைத் தருகின்ற

வசவு – இழிச் சொல் (வசவுச் சொல்லை)

அனுபவிக்க – அனுபவித்தற்கு இடமாய்

மண்ணிலும் விண்ணிலும் – பூலோகத்தில் புகழ்பெறவும், தேவருலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி

தீமையைத் தரக்கூடிய வசவுச் சொல்லை அனுபவித்தலுக்கு இடமாய், பூலோகத்தில் புகழ்பெறவும், தேவலோகத்தில் போகங்கள் பெறவும்

 

செந்தீ தாவு அச அனியாயம் செய் வேதியரே 

செந்தீ தாவு அச – சிவந்த அக்னி தேவன் ஏறுகின்ற ஆட்டை

அனியாயம் செய் – கருணை இல்லாமல் பலிகொடுத்து யாகம் செய்கின்ற

வேதியரே – மறையோரே!

அக்னிதேவன் ஏறும் ஆட்டைப் பலிகொடுத்து வேள்வி செய்யும் வேதியரே!

 

தியங்கா தீ தா வசவ நிமலர் செல்வா சாக்கிரவசத்து அதீதாவச அன்புறப்பார் எனும் முத்தி சித்திக்கவே 

தியங்கா – இனி அப்படித் திகைக்காத

தீ தா – தெளிவான அறிவைத் தந்தருள்க என்றும்

வசவ நிமலர் செல்வா – ரிஷப வாகனத்தை உடைய சிவபிரானின் மைந்தனே!

சாக்கிரவசத்து – கருவி கரணங்கள் வேலை செய்யும் அறிவோடிருக்கின்ற விழிப்பு நிலையிலும்

அதீதாவச – அவையெல்லாம் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும்

அன்புறப் பார் எனும் முத்தி சித்திக்கவே – எனக்கு முத்தி வீடு சித்திக்கும் படி உனது அன்பான நயன தீட்சையை அளிப்பாயாக.


முக்தியை அடைய வேண்டும் என்றால், இனி அவ்வாறு செய்யாது (கருணையின்றி ஆட்டைப் பலிகொடுத்து யாகம் செய்யாது), “சிவபெருமானின் மைந்தனே! விழிப்பு, துரிய நிலைகளில் நல்லறிவையும், நயன தீட்சையையும்  அன்போடு எங்களுக்கு அளிப்பாயாக” என்று கேளுங்கள்.

பொழிப்புரை:

இம்மையில் புகழையும் மறுமையில் போகங்களையும் பெற எண்ணி, ஜீவகாருண்யம் இல்லாமல் ஆட்டைப் பலிகொடுத்து யாகம் செய்யும் அந்தணர்களே! முத்தி வீட்டை அடைய வேண்டுமென்றால், விழிப்பு நிலையிலும், துரிய நிலையிலும் எங்களுக்கு நல்லறிவு உண்டாக, எங்கள் மீது அன்பு வைத்தருள்வாயாக என்று சிவமைந்தனை வேண்டிக் கொள்ளுங்கள்.


“அசெ கம் புரவாது இங்ஙன் செய்வதென்னோ?” [செகம் புரம் வார் கிளை எல்லாம் எனத் தொடங்கும் கந்தர் அந்தாதி 24]

Comments