கந்தர் அந்தாதி – செய்யுள் 29

திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ

திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ

திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா

திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே


பதம் பிரித்த வடிவம்

திகழும் அலங்கல் கழல் பணிவார் சொற்படி செய்ய 

ஓ(தி), கழுமலம், கற்பகவூர், செருத்தணி செப்பி, 

(வெண்பூ)தி கழும் மலம், கற்பு அருளும் என்னா அமண் சேனை

(உபா)தி கழு மலங்கற்கு உரைத்தோனலது இல்லை தெய்வங்களே


பொருள்:

திகழும் அலங்கல் கழல் பணிவார் சொற்படி செய்ய ஓதி

திகழும் – விளங்குகின்ற

அலங்கல் – மாலை சூட்டிய

கழல் – தமது திருவடியை

பணிவார் – வணங்குகின்ற அடியார்களின்

சொற்படி செய்ய – திருவாக்கின்படி நடக்க 

[சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11 ஆவது பாட்டாக திருக்கடைக்காப்பு என்று ஒன்று உண்டு. அப்பதிகத்தைப் பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன் மூலமாக அடியாருக்கு அந்தப் பலனைத் தேடிக் கொடுப்பதை இங்கு குறிப்பிடுகிறார்]

ஓதி – தேவாரத் திருப்பதிகங்களை ஓதி


விளங்குகின்ற மாலை சூட்டிய தன் திருவடியை வணங்குகின்ற அடியார்களின் திருவாக்கின்படி நடக்க தேவாரப் பதிகங்களை ஓதி


கழுமலம், கற்பகவூர், செருத்தணி செப்பி

கழுமலம் – தான் அவதரித்த சீகாழியையும்

கற்பகவூர் – தான் காத்தளித்த அமராவதியையும்

செருத்தணி – என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும்

செப்பி – துதித்து


தான் அவதரித்த சீகாழி, காத்தளித்த அமராவதி, என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணி ஆகிய தலங்களை துதித்து


வெண்பூதி கழும் மலம், கற்பு அருளும் என்னா அமண் சேனை உபாதி கழு மலங்கற்கு உரைத்தோனலது இல்லை தெய்வங்களே

வெண்பூதி – திருவெண்ணீறு

கழும் மலம் – மும்மலத்தைப் போக்கடிக்கும்

கற்பு அருளும் – முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடைமையையும் கொடுக்கும்

என்னா – என்று நினையாத

அமண் சேனை – சமணர் கூட்டத்தை

உபாதி கழு – வருத்தம் தரும் கழு மரத்தில் ஏற்றி

மலங்கற்கு – கலக்கம் அடைந்து அழியும்படி

உரைத்தோனலது – வாது புரிந்த சம்பந்தப் பெருமானாகிய குமரக் கடவுளன்றி

இல்லை தெய்வங்களே – வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை


மும்மலத்தைப் போக்கடிப்பதும், முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடைமையைக் கொடுப்பதும் திருநீறே என்று நினையாத சமணர் கூட்டத்தை, கழுவேறச்செய்து அழியும்படி வாது புரிந்த சம்பந்தப் பெருமானாகிய முருகக்கடவுளன்றி வேறு தெய்வங்களே இல்லை.

மாள அன்றமணீசர்கள் கழு ஏற

 வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா

[வேழம் உண்ட – காசித் திருப்புகழ்]


பொழிப்புரை:

தன் அடித் தொண்டருக்கு நல்ல நெறியாகத் தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்தவரும், முருகப் பெருமான் உறையும் திருத்தலங்களை வழிபடாமலும், விபூதியின் மகிமையை உணராமலும் இருந்த சமணர்களை கழுவேறும்படி வாதில் ஜயித்தவருமான முருகப் பெருமானைத் தவிர வேறு பிரத்யக்ஷ தெய்வங்களே கிடையாது.

[முருகனின் அருள் அவதாரமே ஞானசம்பந்தப் பெருமான் என்பது அருணகிரிநாதரின் உறுதியான கருத்து]


Comments