கந்தர் அந்தாதி – செய்யுள் 27

தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்

தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்

தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்

தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே


பதம் பிரித்த வடிவம்:

தேடிக்கொள் தும்பு அடை கை கூற்று அடாது உளம் சே வில் மை மீன்

தேள் திக்கொடும் படை கோமான் சிறைபட வேறுள

(புத்)தேள் தி கொடும்பு அடையா வெகுநாட்டன் சிறைகளை

(உந்து) ஏடு இக்கொடும் படு ஐ மின் கேள்வன் நற்றுணை சிக்கெனவே

 

பொருள்:

தேடிக்கொள் தும்பு அடை கை கூற்று அடாது உளம்! 


தும்பு அடை – பாசக் கயிற்றைப் பிடித்திருக்கும்

கை கூற்று – கையை உடைய எமன்

அடாது – இந்த உடலை அழிப்பதற்கு முன்

தேடிக்கொள் – (இப்பொழுதே) சம்பாதித்துக்கொள்

உளம் – நெஞ்சமே!

நெஞ்சமே! பாசக்கயிற்றைப் பிடித்திருக்கும் கையை உடைய எமன் இந்த உடலை அழிப்பதற்கு முன்னமே சம்பாதித்துக்கொள்!


எதனை என்று அடுத்து உரைக்கிறார்.

 

சே வில் மை மீன் தேள் திக்கொடும் படை கோமான் சிறைபட வேறுள புத்தேள் தி கொடும்பு அடையா வெகுநாட்டன் சிறை களை உந்து ஏடு இக்கொடும் படு ஐ, மின் கேள்வன் நற்றுணை சிக்கெனவே 


சே வில் மை மீன் தேள் திக்கொடும் படை கோமான் சிறைபட


சே – ரிஷபம்

வில் – தனுசு

மை – ஆடு (மேஷம்)

மீன் – மீனம்

தேள் – விருச்சிகம்

(முதலான எல்லா ராசிகளையும்)

திக்கொடும் படை கோமான் – எல்லா அண்டங்களையும் சிருஷ்டித்த பிரமனை

சிறைபட – சிறையில் அடைத்தவரும்

ரிஷபம், தனுசு, மேஷம், மீனம், விருச்சிகம் முதலான எல்லா ராசிகளையும், எல்லா அண்டங்களையும் படைத்த பிரமனைச் சிறையில் அடைத்தவரும்


வேறுள புத்தேள் தி கொடும்பு அடையா வெகுநாட்டன் சிறை களை 

வேறுள புத்தேள் தி – வேறு தெய்வங்கள் மீதுள்ள பக்தியினால்

கொடும்பு அடையா – மாறிப்போகும் மனப்பான்மை அடையாத

வெகுநாட்டன் – ஆயிரம் கண்களை உடைய இந்திரனின்

சிறை களை – சிறையை நீக்கியவரும்

மற்ற தெய்வங்கள் மேல் கொண்டுள்ள பக்தியினால், மாறிப்போகும் மனப்பான்மை அடையாத கண்ணாயிரம் கொண்ட இந்திரனின் சிறையை நீக்கியவரும்


உந்து ஏடு இக்கொடும் படு ஐ 

உந்து ஏடு – (நீரிலும் நெருப்பிலும்) சமணர்கள் செலுத்திய அவர்தம் பனை ஏடுகளையும்

இக்கொடும் – அவர்கள் செய்த பல கொடூரச் செயல்களையும்

படு ஐ – அழித்த சுவாமியான


அனல் வாதம், புனல் வாதம் செய்த சமணர்களை வென்று, அவர் தம் பனை ஏடுகளையும், செய்த கொடிய செயல்களையும் அழித்த திருஞானசம்பந்த சுவாமியுமான

 

மின் கேள்வன் – தெய்வயானை மணாளன் முருகக் கடவுளின்

நற்றுணை – நல்ல அனுக்ரஹத்தை, துணையை 

சிக்கெனவே – உறுதியாக

(தேடிக்கொள் உளம் – இப்பொழுதே சம்பாதித்துக்கொள் மனமே!)

 

பொழிப்புரை:

மனமே! பாசக்கயிற்றைப் பிடித்துள்ள எமன் உன் உயிரைப் பறிக்காதிருக்க, பிரமனைச் சிறையிலிட்டு, இந்திரனைச் சிறைவிடுத்து, சமணர்களுடனான அனல்-புனல் வாதங்களில் அவர்களை வென்ற தெய்வயானை மணாளனான குமாரக் கடவுளின் துணையை உறுதியாகச் சம்பாதித்துக் கொள்வாயாக.

Comments