கந்தர் அந்தாதி - செய்யுள் 26

செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு

செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்

செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்

செவிக்குன்ற வாரண வள்ளிபொற் றாண்மற்றென் றேடுவதே


பதம் பிரித்த வடிவம்:

செவிக்கு உன் தவா ரண நல்கு இசை பூட்ட வன் சிந்தை

(அம்பு) செ வி குன்ற வாரணம் அஞ்சல் என்று ஆண்டது, நீண்ட கன்ம

செ இக்குன்றவா ரண வேலாயுதம் செற்றது உற்றன

(கட்) செவிக்குன்ற, வாரண வள்ளி பொற்றாள் மற்றென் தேடுவதே

 

பொருள்: 

இந்தப் பாடலில், திருச்செங்கோட்டில் அருள்புரியும் முருகப்பெருமானை நோக்கி, திருப்புகழைக் கேட்டதால் பெற்ற பயனை எடுத்துக்கூறுகிறார் அருணகிரிநாதர்.


கட்செவிக் குன்ற – நாகாசல வேலவனே

கட்செவி – கண்ணையே செவியாக கொண்ட பாம்பு.

நாகாசலம் – பாம்பு போன்ற உருவம் உள்ள மலை. திருச்செங்கோடு.


செவிக்கு உன் தவா ரண நல்கு இசை பூட்ட

செவிக்கு – என்னுடைய காதுக்கு

உன் தவா – உன்னுடைய நீங்காத

ரண நல்கு – உரிமையை – உனக்கும் எனக்கும் விடாத தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் அந்த உரிமையை அளிக்கின்ற

இசை பூட்ட – உன்னுடைய கீர்த்தியைச் சேர்த்துக்கொள்ள

 

வன் சிந்தை அம்புசெ வி குன்ற 

வன் சிந்தை – வலிய என் இதயமாகிய

அம்புசெ – செந்தாமரையில் இருக்கும்

வி – ஜீவாத்மா

குன்ற – இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும் போது

 

வாரணம் அஞ்சல் என்று ஆண்டது

வாரணம் – உன்னுடைய சேவல்

அஞ்சல் என்று ஆண்டது – பயப்படாதே என்று சொல்லி என்னை அடிமை கொண்டது.

 

நீண்ட கன்மசெ இக் குன்று அவா

நீண்ட – மிகப்பெரிய

கன்மசெ – முன்பு செய்த வினையால் விளையும் பிறப்பிற்கு விதையாகிய

இக் குன்று அவா – மலைபோன்ற இந்த ஆசைக் கூட்டத்தை


ரண வேலாயுதம் செற்றது 

ரண – போர் புரிவதில் வல்லமையுள்ள

வேலாயுதம் – உன் திருக்கரத்தில் உள்ள வேல்

செற்றது – தகர்த்துவிட்டது.

 

உற்றன (கட்செவிக் குன்ற) வாரண வள்ளி பொற்றாள்

வாரண வள்ளி – உன்னுடைய கிரியா சக்தி வடிவமான தேவயானை, இச்சா சக்தி வடிவமான வள்ளி

(இவர்களின்)

பொற்றாள் உற்றன – சிறந்த திருவடிகள் என் சிரசின் கண் வந்து அமர்ந்தன


மற்றென் தேடுவதே – இனி, நான் தேட வேண்டியது வேறென்ன இருக்கிறது?

 

பொழிப்புரை:

நாகாசல வேலவனே! உன் திருப்புகழை நான் செவிமடுத்ததும், உன்னுடைய சேவல், என் ஆத்மாவை அபயம் கொடுத்து ஆண்டுகொண்டது. உன்னுடைய வேலாயுதம், ஜனனத்திற்குக் காரணமான ஆசைகளை தகர்த்துவிட்டது. உன் தேவிமார்களின் திருவடி தீக்ஷையும் கிடைத்தது. இனிமேல் நான் தேட வேண்டியது ஒன்றுமே இல்லை.


பின் குறிப்பு:

திருச்செங்கோட்டில் முருகன், தன் கையில் சேவல் கொடிக்குப் பதிலாக சேவலைத் தாங்கிப் பிடித்திருப்பான். அருணகிரிநாதர், இப்பாடலில், செங்கோட்டு வேலவனை அழைத்து, அவனுடைய சேவல், தன் ஆன்மாவை அபயம் கொடுத்து ஆண்டுகொண்டது என்று பாடுவது, இக்குறிப்பை நினைவுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

கந்தர் அந்தாதி செய்யுள் 26 விளக்கவுரை:



Comments

Post a Comment