கந்தர் அந்தாதி – செய்யுள் 25

தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்

தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்

தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்

தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே

 

பதம் பிரித்த வடிவம்:

தெளிதரு முத்தமிழ் வேதத்தில் தெய்வப்பலகையின் கீழ்

தெளி தரு முந்து அமிழா நித்தர் சேவித்து நின்றது என்? நாள்

தெளி தரு முத்து அமிழ்து ஏய் நகை வாசக செல்வி, தினைத்

தெளி தரு முத்து அமிழ் செவ்வேள் இருப்ப செவிகுனித்தே.

 

பொருள்:

“சிவபெருமான், முருகனை வணங்கி நின்றது ஏன்?” என்று இப்பாடலில் கேட்கிறார் அருணகிரிநாதர்.


தெளிதரு முத்தமிழ், வேதத்தில், தெய்வப்பலகையின் கீழ், தெளி தரு 

தெளிதரு – சிந்தைக்குத் தெளிவைத் தருகின்ற அல்லது ஆராயப்படுகின்ற

முத்தமிழ் – இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும்

வேதத்தில் – நான்கு மறைகளிலும்

தெய்வப்பலகையின் கீழ் – மதுரையில் தெய்விகமாக விளங்கிய சங்கப் பலகையிலும் [பழுத்த முது தமிழ்ப்பலகை – வேல் வகுப்பு]

தெளி தரு – மாசற்ற குற்றால மரத்தின் கீழும் [தட்சிணாமூர்த்தியாக]


முந்து அமிழா நித்தர் 

முந்துமுதன்மை ஸ்தானத்தில் இருக்கின்ற

அமிழாஅழிவற்ற

நித்தர் நித்தியராய் விளங்கும் சிவபெருமான் (நித்தர் - எப்போதும் இருப்பவர்)

தெளிவைத் தருகின்ற இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களிலும், மதுரையில் விளங்கிய சங்கப் பலகையிலும் (இறையனார் என்ற தலைமைப் புலவராய்), மாசற்ற குற்றால மரத்தின் கீழே தட்சிணாமூர்த்தியாகவும் முதன்மை ஸ்தானத்தில் விளங்குகிறார் சிவபெருமான்.

 

சேவித்து நின்றது என்(அவர்) பணிந்து நிற்கக் காரணம் என்ன?

முத்தமிழிலும், நான்மறையிலும், சங்கப் பலகையிலும், கல்லால மரத்தின் கீழும் முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமான், முருகனைச் சேவித்து நின்றது எதற்காக? 

அநக வாமனாகார முநிவராக மால் தேட அரிய தாதை தானேவ மதுரேசன் அரிய சாரதா பீடம் என்று இந்தச் சங்கப்பலகையைப் பற்றிப் பாடுகிறார். [மனகபாடதிருப்புகழ்]


நாள் தெளிதரு முத்து, அமிழ்து ஏய் நகை வாசக செல்வி தினை தெளி தரு முத்து அமிழ் செவ்வேள் இருப்ப செவிகுனித்தே 

நாள் தெளிதரு நட்சத்திரம் போல் பிரகாசிக்கும்

முத்து அமிழ்து ஏய் நகை வாசக – முறையே முத்தையும் தேவாமிர்தத்தையும் ஒத்த பல்லையும் மொழியையும் உடைய

செல்விமங்கையாகிய

தினை தெளி - தினை தானியத்தைக் கொழிக்கின்ற வள்ளி நாயகி

தரு முத்து – கொடுக்கும் முத்தத்தினால்

அமிழ் செவ்வேள் – ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கும் முருகவேளானவர்

இருப்ப – குருவாய் வந்தமர்ந்து உபதேசிக்க

செவிகுனித்தே – (சிவனார்) செவியைத் தாழ்த்திக்கொண்டு


(நின்றதென் – பணிந்து நின்று கேட்டது ஏன்?)

 

முத்து அமிழ்து ஏய் நகை வாசக செல்வி என்ற வள்ளியின் வர்ணனையை,

வெளுத்த நகை மறச் சிறுமி என்று வேல் வகுப்பிலும், தேனென்று பாகென்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி என்று கந்தர் அலங்காரம் ஒன்பதாம் பாடலிலும் பாடியுள்ளதை இங்கு நினைவுகூரலாம். 

 

பொழிப்புரை:

முத்துப் போன்ற பல்லும், மிர்தம் போன்ற சொல்லும் உடையவளும், தினை வனத்தில் வளர்ந்தவளுமான வள்ளி கொடுத்த முத்தத்தில் உருகி நிற்கும் முருகப்பெருமான் உபதேசம் செய்த போது, எல்லாவற்றிலும் முதன்மை ஸ்தானம் வகிக்கும் சிவபெருமான், பணிவுடன் கேட்டு நின்றது என்ன காரணத்தினாலோ?

Comments