கந்தர் அந்தாதி – செய்யுள் 24
செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன்
செய்வதென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில்
வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர
வென்னத் தெளிதருமே
பதம் பிரித்த வடிவம்:
செகம் புரம் வார் கிளை எல்லாம் மருண்டு திரண்டு கொண்டு
(அ)செ கம் புரவாது இங்ஙன் செய்வது என்னோ? மயல் செய்ய வன்
(பு)செகம் புர வாசம் எனத் துயில்வார் செப்பு அபங்க!
(பங்க)செ கம்பு உரவா முரல் செந்தூர! என்னத் தெளிதருமே.
பொருள்:
கருணைக்கு அருணகிரி என்பதற்கு ஏற்ப, உயிரைப் பலியிடும் வெறியாடலைக் கடியும் வகையில் அமைந்திருக்கிறது இப்பாடல். யாரை நினைத்து ஏக்கம் உண்டாகி, நோய் வருகிறதோ, அவரின் பெயரைச் சொன்னாலே ஏக்கம் தீர்ந்து, மயக்கமும் தெளிந்து, நோயும் சரியாகும். அதை விடுத்து, பயனற்ற செயல்களை செய்ய வேண்டாம் என்பதே கருத்து.
பெண்ணின் நோய் தீர வெறியாடல் வழியல்ல என்பதை முதல் இரண்டு அடிகளில் பாடுகிறார்.
செகம் புரம் வார் கிளை எல்லாம் மருண்டு திரண்டு கொண்டு, அசெ கம் புரவாது இங்ஙன் செய்வது என்னோ?
செகம் – ஜெகம்
- ஜகம் – உலகம் - இப்பூவுலகிலும்
புரம் – ஊர்
– இவ்வூரிலும் உள்ள
வார் - ஒழுங்கான
கிளை – சுற்றத்தார்
எல்லாம் - அனைவரும்
மருண்டு – பயந்து போய்
திரண்டு கொண்டு – கூட்டமாகக் கூடி
அசெ - அஜெம் / அஜம்
– ஆடு - ஆட்டினுடைய
கம் - தலையை
புரவாது - காப்பாற்றாமல்
இங்ஙன் - இவ்விடத்தில்
செய்வது என்னோ – வெறியாடல் செய்து அதைக் கொல்ல நினைப்பதுதான் என்ன விபரீதம்!
உலகத்தாரும் ஊரில்
உள்ள சுற்றத்தாரும் பயந்து கொண்டு, ஒன்று கூடி, ஆட்டின் தலையைக்
காப்பாற்றாது, அதனை வெறியாடல் என்னும் சடங்கு மூலமாக வெட்டிப்
பலியிடுவது எதனாலோ?
அவ்வாறு செய்யாமல்,
மயல், செய்ய வன் புசெகம் புர வாசம் எனத் துயில்வார் செப்பு அபங்க!
பங்கசெ கம்பு உரவா முரல் செந்தூர! என்னத் தெளிதருமே.
மயல் – ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இப்பெண்ணின் விரகதாபம்
செய்ய வன் புசெகம் புர வாசம் எனத் துயில்வார் செப்பு அபங்க
செய்ய – சிவந்த
வன் – வலிமை
நிறைந்த
புசெகம் – புஜகம்
– பாம்பாகிய ஆதிசேஷனை
புரவாசம் எனத் – சொந்த இருப்பிடமாகக் கொண்டு
துயில்வார் – நித்திரை செய்யும் திருமால்
செப்பு – புகழ்கின்ற
அபங்க – குற்றமற்றவனே
சிவந்த நிறம் உடையதும், வலிமை
மிக்கதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு துயிலும் திருமால்
புகழ்கின்ற குற்றமற்றவனே!
பங்கசெ கம்பு உரவா முரல் செந்தூர
பங்கசெ – பங்கஜ
– தாமரைத் தடாகத்தில்
கம்பு – சங்கு
உரவா – ஓயாமல் ஒலிக்கும்
செந்தூர – செந்திற்பதியோனே
தாமரை வாவியில், சங்குகள் சத்தமாக ஒலிக்கும் செந்தில் பதியின் தலைவனே!
சங்கம் கஞ்சம் கயல்
சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் தங்கும் செந்தில் என்று செந்தூரைப்
பற்றி பாடியிருக்கிறார். [வஞ்சம் கொண்டும் திட ராவணனும் – திருச்செந்தூர்த்
திருப்புகழ்]
என்ன – என்று அவன் நமத்தைச் சொன்னால்
தெளிதருமே - அக்கணத்திலேயே இப்பெண்ணின் மயக்கம் தீர்ந்து விடுவது நிச்சயம்.
வேடர் குலத்தில் ஒரு பெண்ணுக்கு நோய் வந்து மயக்கமுற்றால், வேலன் எனும் பூசாரியைக் கூப்பிட்டு வெறியாடல் எனும் பூஜை செய்வார்கள். ஆட்டை அறுத்துப் பலியிட்டு, தினை அரிசியில் ரத்தத்தைக் கலந்து வைப்பான் வேலன். ரத்தத்தை நினைவூட்டும் சிவப்பு மலர்களைப் போட்டு விடுவான். அவன் இடி இடித்தாற்போலக் கத்துவதும் உடுக்கையை அடித்து ஆடுவதும் இந்த ரத்தச் சூழலும் அவ்விடத்தை பயம் நிரம்பிய இடமாக்கிவிடுகின்றன. வேலன்மேல் ஆவேசம் வந்து அவன் குறி சொல்லுவான்.
பொழிப்புரை:
தலைவியின் நோய்க்குத் தலைவன் உண்மைக்காரணமாக இருக்க, வீணாக ஏன் ஆட்டைப் பலியிட வேண்டும்? அரவணையில் துயிலும் திருமால் மெச்சிய மாசற்ற மருகனே! இயற்கைவளம் நிறைந்த செந்திலம்பதியோனே! என்று கூறினால் அக்கணமே நோய் தெளிந்துவிடும்.
[இச்செய்யுள் வெறிவிலக்கல் எனும் துறையைச் சேர்ந்தது]
.jpg)
Comments
Post a Comment