கந்தர் அந்தாதி – செய்யுள் 23
தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை
யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தியின்
றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ
ரீர்வர் செகமெங்குமே
பதம் பிரித்த வடிவம்:
தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்,
(செந்)தில் நகரர், அக்கரம் ஆறுடையார், தெய்வ ஆரணத்
(தந்)தி நகர் அர கர சத்தி இன்று ஆகில், அத் தேவர்
(நண்ப)தி ந; கர ரக்கர் அதம் தீர்வர்; ஈர்வர் செகம் எங்குமே
பொருள்:
இப்பாடலில் முருகப்பெருமானின் வேலாயுதத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்
தினகரர் – பகன், பூஷண் எனும் இரு சூரியர்களின்
அக்க – (பகனின்) கண்ணையும்
ரதம் – (பூஷணின்) பல்லையும்
கெடுத்தார் – பறித்தவரான சிவபெருமானுக்கு
குரு தேசிகர் – குருநாதன் ஆனவர்
பகன், பூஷண் என்னும் இரு சூரியர்களின் கண், பல் ஆகியவற்றை முறையே (தக்க யாகத்தில்) அழித்த சிவபெருமானுக்கு உபதேசம் செய்த உயர்ந்த ஞானாசிரியர்
“கதிர் தோற்ற எயிறுக”, “கதிரவன் பற்குற்றி”, “ஆதவனைச் சினத்துறு பற்போக உடைத்த தற்பரன்” என்றெல்லாம் திருப்புகழில் பாடுகிறார் அருணகிரியார்.
செந்தில் நகரர்
செந்தில் – திருச்செந்தூர்
நகரர் – பதியில் உறைபவர்
திருச்செந்தூரில் உறைபவர்
அக்கரம் ஆறு உடையார்
அக்கரம் - எழுத்து
ஆறு உடையார் – ஆறு
எழுத்து மந்திரத்தின் உட்பொருளாய்த் திகழ்பவர்
ஷடாக்ஷரத்தின் உட்பொருளாய் விளங்குபவர்
தெய்வ ஆரணத் தந்தி நகர்
தெய்வ - தெய்விகமான
ஆரண – வேதங்களால் பூஜிக்கப்பட்ட
தந்தி நகர் – பாம்பு போன்ற உருவம் கொண்ட மலையை உடைய திருச்செங்கோட்டில் உறையும் வேலனின்
தெய்வத்திருமலைச் செங்கோடு (கந்தர் அலங்காரம்)
தெய்வத்தன்மை உடைய
மறைகள் பூஜித்ததும், சர்ப்பத்தின் வடிவில் இருப்பதுமான, திருச்செங்கோடு என்னும் மலைத்தலத்தில் வசித்து, அருளாட்சி
புரிபவருமான கந்தப் பெருமானின்
அர கர சத்தி இன்று ஆகில்
அர – அரம்
போல் கூர்மை உடைய
கர - திருக்கரத்தில் தரித்த
சத்தி - வேலாயுதம்
இன்று ஆகில் – (மட்டும்) இல்லை என்றால்
அத் தேவர் நண் பதி ந
அத் தேவர் – அத்தேவர்கள்
நண் பதி – பொருந்தி வாழ்கின்ற அமராவதிப் பட்டினமாம் பொன்னகரம்
ந – இல்லாமல்
போயிருக்கும்
கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகம் எங்குமே
கர – (அத்துடன்) கோபமும்
வஞ்சனையும் உடைய
ரக்கர் – ராக்ஷதர்கள்
அதம் தீர்வர் – மரணத்தைத் தவிர்த்திருப்பார்கள்
ஈர்வர் செகம் எங்குமே – உலகம் முழுவதிலும் பரவி அதை நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்
கோபமும் வஞ்சனையும் மிகுந்த அரக்கர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள். உலகம் முழுவதையும் நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.
பொழிப்புரை:
தக்ஷ யக்ஞத்தில், ஆதித்தர் இருவரின் பல், கண் இவற்றைப் பிடுங்கி தண்டனை அடையச்செய்த
சிவபிரானின் குரு, செந்தில் நகரில் உறைபவன், ஆறெழுத்தின் உட்பொருளானவன், வேதங்கள் பூஜித்த
நாகாசல வேலவன் ஆகிய முருகனுடைய திருக்கை வேலாயுதம் இல்லாவிடில், அமராவதி அழிந்திருக்கும்;
அசுரர்கள் இறப்பை ஒழித்து என்றும் வாழ்ந்து உலகை நிர்மூலமாக்கியிருப்பார்கள்.
கந்தர் அந்தாதி செய்யுள் 23 விளக்கவுரை
.jpg)
Comments
Post a Comment