கந்தர் அந்தாதி – செய்யுள் 22

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்

செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்

செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த

செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே

 

பதம் பிரித்த வடிவம்: 

செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்

செல் தை வரும் பழநிக் கந்த! தேற்றிடு; நூற்றுவரைச்

செற்று, ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த

செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத் தினத்தில் வந்தே


பொருள்:

இப்பாடலில், முருகனை அழைத்து, நமக்கு அபயம் அளித்து காப்பாற்று என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர். 

செற்றை வரும் பழனம், சோலை, இஞ்சி திகழ் வரை மேல், செல் தை வரும் பழநிக் கந்த!

செற்றை வரும் – செற்றை என்னும் மீன் இனம் உலாவும்

பழனம் – வயல்களும்

சோலை - பொழில்களும்

இஞ்சி - மதில்களும்

திகழ் - விளங்குகின்றதும்

வரை மேல் செல் தை வரும் - மலை மேல் மேகங்கள் தவழ்கின்றதும் ஆன

பழநிக் கந்த – பழனியில் வசிக்கும் கந்தனே


செற்றை என்னும் மீன் இனங்கள் நிறைந்து காணப்படும், நீர் வளம் பொருந்திய வயல்கள், பூக்கள் நிறைந்து காணப்படும் சோலைகள், திடமான மதில்கள் விளங்குகின்றதும் மலையின் மேல் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து வருகின்றதுமான பழனிமலையின் நாயகனான கந்தனே!


தேற்றிடு – எனக்கு அபயம் அளித்துக் காப்பாற்று

 

நூற்றுவரைச் செற்று, ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத் தினத்தில் வந்தே

முதலில் திருமால் பற்றிய குறிப்பு வருகிறது. 

நூற்றுவரைச் செற்று, ஐவரும் பழநாடு ஆள நாடி

நூற்றுவரைச் செற்று – துரியோதனன் முதலான கௌரவர்கள் நூறு பேரையும் அழித்து

ஐவரும் பழநாடு ஆள – பஞ்ச பாண்டவர்களும் பழைய குரு நாட்டை அரசாளும் படிக்கு

நாடி – விரும்பி நிறைவேற்றிய கண்ண பிரானின்


குருக்ஷேத்திரப் போரில், கௌரவர்கள் அழிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்று அரசாளும்படி செய்த கண்ணன் 

அடுத்து, சூரியனைப் பற்றிச் சொல்லி, அவன் பிள்ளையான யமனைப் பற்றிச் சொல்கிறார்.

கண் சேய் – (கண்ணனின்) ஒரு கண் ஆன சூரியனின் பிள்ளையான யமன்

(விவச்சுவான் எனும் சூரியனுக்குச் சாயாதேவியிடம் பிறந்தவன் யமன்)


விடுத்த செற்றை வரும் – அனுப்பிய அவனுடைய தூதர்கள் கூட்டம் வருகின்ற பொழுதில்

பழமாம் கூடு வேம் அத் தினத்தில் – பழுத்துப் போன இவ்வுடம்பு, உயிர் நீங்கி எரிக்கப்பட்டு வெந்துபோகும் அந்தத் தினத்தில்

வந்தே – எழுந்தருளியே (தேற்றிடு – அபயம் அளித்திடு)


யமன் அனுப்பிய தூதர்கள் வந்து, முதிர்வடைந்த இந்த உடலை, தீயில் இட்டுப் பொசுக்கும் அக்கடை நாளில் வந்து எழுந்தருளி, அபயம் அளிக்க வேண்டும். 

“இடுகாட்டில் என்னை எரியூட்டு முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ” [குடிவாழ்க்கை – வள்ளிமலைத் திருப்புகழ்] 

பொழிப்புரை:

பழநி ஆண்டவனே! துரியோதனன் முதலானோரை அழித்து, பாண்டவர்களை அரசாளச் செய்த திருமாலின் கண் ஆகிய சூரியனின் புதல்வனாம் யமராஜன் அனுப்பிய தூதர்கள் வரும்போது, என் உடல் எரியூட்டப்பட்டு வெந்து போவதற்கு முன் எனக்கு நீ அபயம் தந்தருள வேண்டும்.

Comments