கந்தர் அந்தாதி – செய்யுள் 21

சிந்தா குலவ ரிசைப்பேரு மூருநஞ் சீருமென்றோர்

சிந்தா குலவ  ரிடத்தணு காதரு டீமதலை

சிந்தா குலவரி மாயூர வீரா செகமளப்பச்

சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே

 

பதம் பிரித்த வடிவம்:

சிந்தா குலவரிசைப் பேரும் ஊரும் நம் சீரும் என்று ஓர்

சிந்தா குலவரிடத்து அணுகாது அருள்; தீ மதலை

சிந்தா, குலவு அரி மாயூர வீரா! செகம் அளப்பச்

சிந்தாகு உலவு அரி மருக! சூரனைச் செற்றவனே!


பொருள்: 

இந்தப் பாடலில், அஞ்ஞானிகளின் நட்பு நீங்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.


சிந்தா குலவரிசைப் பேரும் ஊரும் நம் சீரும் என்று ஓர் சிந்தா குலவரிடத்து அணுகாது அருள்

சிந்தா ஒருபொழுதும் அழியமாட்டா

குலவரிசைப் பேரும் ஊரும் நம் சீரும்நமது வமிசத்தின் பெயரும், நகரமும், ம் சீரான வாழ்வும்

என்று ஓர்என்று நினைத்து

சிந்தா குலவரிடத்து – (பின்னால்) வருந்தும் அஞ்ஞானிகள் பால்

அணுகாது அருள்நான் சேராதபடி அருள்வாயாக

நம்முடைய பரம்பரையின் பெயரும், நாம் வசிக்கும் இடமும், நம் சீரான வாழ்வும் ஒருகாலும் அழியாது என்று எண்ணும் அஞ்ஞானிகளிடம் நான் சேராமல் இருக்க அருள்புரிவாய் என்று முருகனிடம் தன் பிரார்த்தனையை முன் வைக்கிறார் அருணகிரிநாதர்.

அடுத்து, முருகனை, எவ்வாறெல்லாம் அழைக்கிறார் என்று பார்ப்போம். 

1.   தீ மதலை சிந்தா

2.   குலவு அரி மாயூர வீரா

3.   செகம் அளப்பச் சிந்தாகு உலவு அரி மருக

4.   சூரனைச் செற்றவனே


1.   தீ மதலை சிந்தா

தீ – அக்னி

மதலை – குழந்தை - இவ்விடத்தில் அக்னியின் உருவாய் வந்த கோழியை

சிந்தா – கொடியாக உடையவனே

அக்னியே உருவெடுத்து வந்த கோழியை கொடியாக உடையவனே.

தீ மதலை சிந்தா = முருகன், சூரனோடு பொருத போது, அக்னியே அவனுக்குக் கோழிக் கொடியாகத் தோன்றியதால், கோழிக்கொடியை, “தீ மதலை சிந்தா” என்கிறார். (சிந்து – கொடி) 

“போதம் அங்கதிற் புங்கவர் யாவருஞ்

சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்

மீது கேதனம் இல்லை வியன்கொடி

ஆதி நீயென் றழலினை ஏவினார்


ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்

வாவு குக்குட மாண்கொடி யாகியே

தேவதேவன் திருநெடுந் தேர்மிசை

மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட”

(கந்த புராணம் - யுத்த காண்டம் - சூரபத்மன் வதைப்படலம்) [4.13.205, 206]

2.   குலவு அரி மாயூர வீரா

குலவு – விளங்குகின்ற

அரி – பச்சை நிறமுடைய

மாயூர – மயிலை வாகனமாகக் கொண்ட

வீரா – வீரனே

விளங்குகின்ற பச்சை நிறமுடைய மயிலை வாகனமாக உடைய வீரனே.

[சூரபத்மனோடு போரிட்ட போது, முருகனுக்கு, அக்னி தேவன் சேவல் கொடியாகவும், இந்திரன் மயிலாகவும் வந்தனர்].

3.   செகம் அளப்பச் சிந்தாகு உலவு அரி மருக

செகம் – மூவுலகத்தையும்

அளப்ப – அளப்பதற்கு

சிந்தாகு – வாமன அவதாரம்

உலவு – எடுத்து உலாவிய

அரி – திருமால்

மருக – மருகனே 

மகாபலியிடமிருந்து, தேவர்களுக்கு அவர்களது உலகைப் பெற்றுக்கொடுப்பதற்காக, மூவுலகையும் ஈரடியால் அளந்த வாமன மூர்த்தியான மாலோன் மருகனே.

4.   சூரனைச் செற்றவனே 

சூரனை – சூரபத்மனை

செற்றவனே – அழித்தவனே


பொழிப்புரை:

சேவற்கொடியோனே! மயில் வாகனனே! வாமன அவதாரம் எடுத்த மாலின் மருகனே! சூரனைச் செற்றவனே! பொய்யான நம்முடைய இந்த வாழ்க்கை நிலையானது என்று கருதும் அஞ்ஞானிகள்பால் நான் சேராது இருக்க எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.

Comments