கந்தர் அந்தாதி – செய்யுள் 20
செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே
பதம் பிரித்த வடிவம்:
செய துங்கபத்திரி போற்றும் பகீரதி கர; செவ்வேல்
செய; துங்க பத்திரி சூடும் குறத்தி திறத்த; தண்டம்
செய துங்க பத்தி ரிபு திரி பாதத்தர் செல்வ; தென் பால்
செய் அதுங்கு அபத்து இரிய திரியாது இரு என் சிந்தையிலே
பொருள்:
இப்பாடலில், நம் சிந்தையில் முருகன் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டப்படுகிறது.
முருகனை எவ்வாறெல்லாம் அழைக்கிறார் என்று முதலில் பார்ப்போம்.
1. செய துங்கபத்திரி போற்றும் பகீரதி கர
2. செவ்வேல் செய
3. துங்க பத்திரி சூடும் குறத்தி திறத்த
4. தண்டம், செய, துங்க, பத்தி ரிபு திரி பாதத்தர் செல்வ
செய துங்கபத்திரி போற்றும் பகீரதி கர
செய – சிறந்த கீர்த்தி உடைய
துங்கபத்திரி – துங்கபத்திரி எனும் நதி (துங்கை, பத்திரி எனும் இரு நதிகளும் சேர்ந்ததால்
துங்கபத்திரி எனும் பெயர் வந்தது)
போற்றும் - வணங்கும்
பகீரதி – பகீரதனின் முயற்சியால் பூமிக்குக் கொண்டுவரப்பட்ட கங்கை
நதியின்
கர – கையால் ஏந்தப்பட்டவனே
பெருமையுடைய துங்கபத்திரி நதி வணங்கும் கங்கை நதியின் கரத்தால்
ஏந்தப்பட்டவனே!
செவ்வேல் செய
செவ்வேல் – சிவந்த வேலாயுதத்தை உடைய
செய – வெற்றி வீரனே
சிவந்த வேலாயுதத்தைக் கையில் உடைய வெற்றி வீரனே
துங்க பத்திரி சூடும் குறத்தி திறத்த
துங்க பத்திரி – சுர புன்னை இலையை
சூடும் – கூந்தலில் சூடிக்கொள்ளும்
குறத்தி - வள்ளியின்
திறத்த – மணவாளனே
சுரபுன்னை இலையினைத் தலையில் சூடிக்கொள்ளும் வள்ளியின் மணவாளனே
[சுரபுன்னை – நாகம்; “நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தை சேர் சிராமலை”
– வாசித்துக் காணொணாதது – திருச்சிராப்பள்ளி திருப்புகழ்]
தண்டம் செய துங்க பத்தி ரிபு திரி பாதத்தர் செல்வ
தண்டம் – தண்டாயுதத்தையும்
செய – வெற்றியையும்
துங்க – மேன்மையையும்
பத்தி – ஒழுக்கத்தையும் (உடைய)
ரிபு – (மாறுபட்ட) எதிரியாம் யமன்
திரி பாதத்தர் செல்வ – (மார்க்கண்டேயனைக் காப்பதற்காக) அடி பட்டு விழுமாறு உதைத்த திருவடிகளை உடைய சிவனின் செல்வ குமரனே!
(வைத்தீஸ்வரன் கோயிலில் முருகன், ‘செல்வமுத்துக்குமரன்’ என்று அழைக்கப்படுகிறான்)
தண்டாயுதமும், வெற்றியும், மேன்மையும், ஒழுக்கமும் உடையவனும்,
மார்க்கண்டேயரை அழிக்க வந்தமையால் அவருக்கு எதிரியானவனுமான யமனைக் காலால் உதைத்து அழித்த
சிவபெருமான் அருளிய செல்வனே.
தென் பால் செய் அதுங்கு அபத்து இரிய திரியாது இரு என் சிந்தையிலே
தென் பால் செய் – தெற்கு வழியில் செல்லச் செய்வதும்
அதுங்கு – யாவராலும் ஒதுக்கப்படுவதும் ஆகிய
அபத்து – தீ நெறியினால்
இரிய – என் சிந்தை கலங்கி
திரியாது – நான் உழலாதபடி
இரு என் சிந்தையிலே – என் உள்ளத்தில் நீ வீற்றருள வேண்டும்
(தீநெறியில் ஒழுகும் நம் உயிரை எடுத்துக்கொண்டு, யமன், தெற்குப்
பக்கம் செல்வான்)
தெற்கில் இருக்கும் யமபுரத்திற்கு அழைத்துச்செல்வதும், யாவராலும் ஒதுக்கப்படுவதுமான தீ நெறியில் நம் மனம் ஒழுகி, கலங்கி உழலாமல் இருக்க, நம் சிந்தையில் முருகன் வீற்றருள வேண்டும்.
பொழிப்புரை:
பகீரதி குமாரனே (காங்கேயனே!) வெற்றி வேலாயுதனே! சுரபுன்னை இலையைக் குழலில் சூடியுள்ள வள்ளி மணாளனே! காலகாலனாம் சிவனது குமாரனே! யமபுரத்துக்குக் கொண்டு செல்லும் தீநெறியில் நான் உழலாதபடி என் உள்ளத்தில் நீ என்றும் குடியிருக்க வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment