கந்தர் அந்தாதி - செய்யுள் 19

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்

சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்

சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்

சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே


பதம் பிரித்த வடிவம்:

சீயன் நம் போதி என வாய் புதைத்துச் செவி தர; தோல்,

சீய நம்பு ஓதிய மலையின் தாதை, சிறுமுநிவன்

சீயன்; அம்போதி கடைந்தான் மருகன் செப்பத் திகைத்தார்

சீ! அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே?


பொருள்: 

இப்பாடலில், பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரமன், எதற்காக ரிக் வேதத்தைக் கற்றுக்கொண்டார் என்று கேட்கிறார். முருகப் பெருமான், பிரமனிடம் பிரணவத்திற்குப் பொருளைக் கேட்ட போது, பிரமன் திகைத்தார். சிவபெருமானோ பணிவுடன் சிஷ்ய பாவத்தில் இருந்துகொண்டு, முருகனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அகஸ்தியரைப் பற்றியும், அவர் வசிப்பிடமான பொதிகை மலை பற்றியும் இச்செய்யுளில் வருகிறது.


சீயன் நம் போதி என வாய் புதைத்துச் செவி தர 

சீயன்சீபார்வதி; சீயன்பார்வதி நாயகன் - சிவபெருமான்

நம் போதிநமக்கு சொல்வாயாக

என - என்று

வாய் புதைத்துபணிவோடு வாயை மூடிக்கொண்டு

செவி தரகாதினைத் தாழ்த்திக் கேட்க

சிவபெருமான், பணிவொடு வாயை மூடிக்கொண்டு, செவிசாய்த்து, முருகனிடம், “எனக்கு உபதேசிப்பாயாக” எனக் கேட்க.

“திருமொழி உரைபெற அரனுன துழிபணி

    செயமுன மருளிய           குளவோனே” [விருத்தாசலம் திருப்புகழ்] 

[வேதமொழியாம் பிரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக, சிவபெருமான் உன்னிடத்தில் வணங்கி நிற்க, முன்பு அவருக்கு, அதனை உபதேசித்து அருளிய சரவணப்பொய்கையில் அவதரித்தவனே]

 

தோல் சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறுமுநிவன் சீயன் அம்போதி கடைந்தான் மருகன் 

தோல் - யானைகளுக்கும்

சீய - சிங்கங்களுக்கும்

நம்பு – அடைக்கலமாக இருக்கின்றதும்  

ஓதிய – கல்விக்கு இருப்பிடமாக இருக்கின்றதுமான

மலையின் – பொதிகை மலையின்

தாதை – முதல்வர் / தலைவர் ஆன 

சிறுமுநிவன் – அகஸ்திய முநிவருடைய

சீயன் – பாட்டனாராகிய

அம்போதி கடைந்தான் மருகன் – திருப்பாற்கடலைக் கடைந்த திருமாலின் மருகனாம் முருகன் 

[அகஸ்தியர் பிரம்மதேவனுடைய புத்திரர் என்கிறது காவிரிப்புராணம்; பிரமன், திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவன்; இதன்படி, திருமால் அகஸ்தியருக்குப் பாட்டன் முறையாகிறார். இதையே “சிறுமுநிவன் சீயன் அம்போதி கடைந்தான்” என்று குறிப்பிடுகிறார்.


செப்பத் திகைத்தார்

செப்ப – உபதேசம் செய்தபோது (அது கண்டு)

திகைத்தார் – (பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமன்) திகைத்து நின்றார். 

யானைகளும், சிங்கங்களும் தஞ்சமடைகின்றதும் கல்விக்கு இருப்பிடமாய் இருப்பதுமான பொதிகை மலையின் தலைவன், குறள் வடிவுடைய முநிவரான அகஸ்தியரின் பாட்டனாராகிய திருப்பாற்கடலைக் கடைந்த திருமாலின் மருகனாம் முருகன், பிரணவத்தின் பொருளை உரைத்த போது, பிரமன் திகைத்தார்.


சீ; அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே? 

சீ - இது மிகவும் இகழத்தக்கது

அனம் போதில் அரன் – அன்ன வாகனத்திலும் தாமரையிலும் வீற்றிருக்கும் பிரமன்

ஆதி ருக்கு என் செயக் கற்றதே - பழைமையான ரிக் வேதத்தை என்ன செய்வதற்காகக் கற்றுக்கொண்டார்

பொழிப்புரை: 

பார்வதிபாகனாம் சிவபெருமான் பணிவுடன் கேட்க, திருமால் மருகனாம் முருகன் அவருக்குப் பிரணவோபதேசம் செய்தான். முன்பு பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த பிரமன் இது கண்டு திகைத்து நின்றான். இது மிகவும் இகழத்தக்கதொன்றாம். பழமையான ரிக் வேதத்தை என்ன செய்வதற்காகத்தான் கற்றுக்கொண்டானோ பிரமன்?


பின் குறிப்பு:

பொதிகை மலை:

கயிலாயத்தில் சிவபெருமான் – உமையம்மை திருமணம் நடைபெறும் நேரத்தில், அனைத்து தேவதைகளும் அங்கே குவிந்தனர். பாரம் தாங்க முடியாததால், பூமியின் வடக்குப் பகுதி தாழ்ந்து, தெற்குப் பகுதி உயர்ந்தது. உலகை சமன் படுத்த வேண்டி, சிவபெருமான், அகஸ்திய முநியை, தென் திசை நோக்கிச் செல்லுமாறு பணித்தார். தெற்கே சென்றால், ஐயனின் திருமணக் கோலத்தைக் காண முடியாது என்று அகஸ்தியர் அங்கே செல்ல தயங்கினார். சிவபெருமானும் அகஸ்தியரிடம் எப்போது அவர் நினைத்தாலும் தங்களது திருமணக்கோலத்தைக் காணலாம் என்று உறுதி கொடுத்தார். அதற்குப் பிறகும், அகஸ்தியருக்கு, கயிலாயத்தை விட்டுச் செல்ல மனமில்லை. தனக்குத் தமிழ் தெரியாது என்றும் தென் திசையில் தமிழ் மொழியே பேசுவார்கள் என்றும் கூறி, மீண்டும் தன் மன எண்ணத்தை அகஸ்தியர் தெரிவித்தார். சிவபெருமானோ, அகஸ்தியரிடம், திருத்தணியில் வசிக்கும் தன் மகன், அவருக்குத் தக்க நேரத்தில் வந்து தமிழைக் கற்பிப்பார் என்றும் பழநிமலையை அவர் அடையும் போது, முத்தமிழ் இலக்கணங்களையும் கற்றுக்கொடுப்பான் என்றும் கூறி அகஸ்தியரைத் தெற்கு நோக்கி அனுப்பி வைத்தார்.

அவ்வண்ணமே தென்னாட்டிற்கு வந்த அகஸ்தியர், தமிழைக் கற்றார். உலகும் சமனிலை பெற்றது. கல்வி கற்ற குறுமுநி அகஸ்தியர், பொதிகை மலையில் தங்கினார். பொதிகை மலை, கல்விக்கு இருப்பிடமானது. இச்செய்யுளில் ஓதிய மலை என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

மேலும், பொதிகை மலையில், யானைகள், சிங்கங்கள் ஆகியவற்றின் நடமாட்டம் இருக்கும் என்ற இயற்கை வர்ணனையும் இங்கு வருகிறது [தோல் சீய நம்பு ஓதிய மலை].

Comments