கந்தர் அந்தாதி – செய்யுள் 18

தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்

தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்

தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்

தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே


பதம் பிரித்த வடிவம்:

தினை ஏத்தி அன்பு செய் வேந்தன் பதாம்புயத்தில் பத்தி

(புந்)தி நைவேத்தியம் உகந்து ஏற்றினர் மாற்றினர்; பாற்றினம்

(தீத்)தின் ஐ வேத்தியர் நெறி செல்லாத இந்தியத் தித்தி

(இனத்)தின் நைவு ஏத்து இயங்கு உயிர் கூற்று ஆரில் ஊசிடும் சீ உடம்பே

 

பொருள்:

இப்பாடலில், நம் உடல் எப்படிப்பட்டது என்றும், பக்தி நிறைந்த நமது உள்ளத்தையும் புத்தியையும் முருகனுக்கு விருப்பமுடன் சமர்ப்பித்தால் அதனால் உண்டாகும் நன்மை என்ன என்பது பற்றியும் பாடுகிறார்.

முருகனை, தினை ஏத்தி அன்பு செய் வேந்தன் என்று குறிப்பிடுகிறார்.

தினை - தினைப்புனத்தின்

ஏத்தி – இறைவியாகிய வள்ளி நாயகி

அன்பு செய் – அன்பு புரியும்

வேந்தன் – தலைவனான முருகப்பெருமானின்

பதாம்புயத்தில் பத்தி புந்தி நைவேத்தியம் உகந்து ஏற்றினர் மாற்றினர்

பதாம்புயத்தில் – அவனது பாதத் தாமரையில்

பத்தி – அன்பையும்

புந்தி – அறிவையும்

நைவேத்தியம் – அவனுக்கே உரியவைகளாக ஆக்கி

உகந்து ஏற்றினர் – விருப்பமொடு சமர்ப்பித்த அடியார்கள்

மாற்றினர் – மாற்றிவிட்டார்கள்.

எதனை மாற்றிவிட்டார்கள் என்பதை இறுதியில் சொல்கிறார்.

பாற்றினம், தீ தின்; ஐ வேத்தியர் நெறி செல்லாத; இந்தியத் தித்தி இனத்தின் நைவு ஏத்து; இயங்கு உயிர் கூற்று ஆரில் ஊசிடும்; சீ உடம்பே

1.   பாற்றினம் தீ தின்

பாற்றினம் – பருந்துக் கூட்டங்களும்

தீ – அக்னியும்

தின் – (இறந்துபட்டபின்) உண்ணுகின்றதும்

பருந்துக் கூட்டங்களும், நெருப்பும் உண்ணக்கூடியதும்

2.   ஐ வேத்தியர் நெறி செல்லாத

ஐ - அழகிய

வேத்தியர் – அறிஞர்களாகிய பெரியோர்களால் [வேத்து – அறிவு]

நெறி – வகுக்கப்பட்ட / உணர்த்தப்பட்ட நல்வழியில்

செல்லாத – செல்லாததும்

அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட வழியில் செல்லாததும்

3.   இந்தியத் தித்தி இனத்தின் நைவு ஏத்து

இந்திய – ஐம்புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டதும்

தித்தி இனத்தின் – தின்பண்ட வகைகளின்

நைவு – கழிவாகிய மலம், ஜலம் முதலியவற்றை

ஏத்து – தன்னிடம் கொண்டதும்

ஐந்து இந்திரியங்களினால் கட்டுப்படுத்தப்பட்டதும், பலவகை உணவுகளை உண்பதால் உண்டாகும் கழிவுகளை தன்னிடம் கொண்டதும் 

4.   இயங்கு உயிர் கூற்று ஆரில் ஊசிடும்

இயங்கு – உள் நின்று இயங்கும்

உயிர் – பிராணனை

கூற்று – யமன்

ஆரில் – அபகரித்துவிட்டால்

ஊசிடும் – ஊசி நாறிப் போவதும்

உள்ளிருந்து இயங்கும் உயிரை யமன் அபகரித்துவிட்டால், ஊசிப் போவதும்

5.   சீ – அருவருக்கத்தக்கதும்

உடம்பே – ஆன இந்த உடம்பை

(மாற்றினர் – சரீர அபிமானத்தை ஒழித்துவிட்டனர்)

அடியார்கள், தங்கள் உள்ளத்தையும் புத்தியையும் விருப்பமோடு முருகனுக்கு அளித்து, பருந்துக் கூட்டங்களும், நெருப்பும் விழுங்கக்கூடியதும், பெரியோர்கள் வகுத்துக்கொடுத்த வழியில் ஒழுகாததும், ஐந்து இந்திரியங்களினால் கட்டுப்படுத்தப்பட்டதும், விதவிதமான தின்பண்டங்களை உண்பதால் உருவாகும் பல கழிவுகளை உடையதும், உள்ளிருந்து இயங்கும் உயிரை யமன் கொண்டுசென்றுவிட்டால் ஊசிப்போவதும், அருவருக்கத்தக்கதுமான இந்த உடம்பின் மேல் இருக்கும் அபிமானத்தை ஒழித்துவிட்டனர்.

இத்தகைய உடம்பினை மிகவும் உயர்வுடையதும் ஒளியுடையதுமாக மாற்றிவிட்டார்கள். உடம்பையும் ஒழித்து, பிறப்பையும் ஒழித்துவிட்டனர். முருகனிடம் பக்தி செலுத்தியதால் அவர்களுக்கு முக்தி கிடைத்தது. பிரமத்தோடு ஒன்றிவிட்டனர்.

“மௌனத்தை உற்று நின்னை உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்னை மறந்திருந்தேன்; இறந்தேவிட்டது இவ்வுடம்பே!”

[கந்தர் அலங்காரம் 19]

பொழிப்புரை:

வள்ளியின் நாயகனான முருகப்பெருமானின் திருவடித்தாமரையில் தங்கள் அன்பையும், அறிவையும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்ற அடியார்கள், இறந்தபின் பருந்துகளாலும் நெருப்பினாலும் உண்ணப் படக்கூடியதும், பெரியோர்கள் வகுத்த நல்ல பாதையில் செல்லாததும், பஞ்சேந்திரியங்களால் கட்டுப்படுத்தப்பட்டதும், பல உணவு வகைகளை உண்டதால் உருவான கழிவுகளை உடையதும், உயிரை யமன் கொண்டு சென்றால் ஊசக்கூடியதும், அருவருக்கத்தக்கதுமான இந்த உடலின் மீதுள்ள அபிமானத்தை ஒழித்துவிடுவார்கள்; இதன் மூலம் பிறப்பைத் தவிர்ப்பார்கள்.

Comments