கந்தர் அந்தாதி - செய்யுள் 17

சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்

சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்

சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்

சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே


பதம் பிரித்த வடிவம்:

சேர் இக்கு வடு மொழி விழியாள் தனச்செவ்வி

(குறச்)சேரிக்கு வடு விளைந்தது அன்றே நன்று; தெள் திரை நீர்

சேரி கு அடு கடைநாளிலும் சிதைவற்ற செவ்வேள்

சேரி குவடு புடைசூழ் புனத்தில் தினை விளைவே


பொருள்: 

முருகன், வள்ளியை ஆட்கொண்டு அருளியதைப் பற்றி இப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது.

வள்ளியைப் பற்றிய வர்ணனை முதலில் வருகிறது.

சேர் இக்கு வடு மொழி விழியாள்

சேர்விளங்கும்

இக்குகரும்பையும்

வடுமாவடுவையும்

(முறையே ஒத்த)

மொழிபேச்சினையும்

விழியாள்கண்களையும் உடையவள்

கரும்பைப் போன்ற இனிமையான பேச்சையும், மாவடு போன்ற விழிகளையும் உடைய வள்ளி நாயகி.

வள்ளியின் கண்களை, “இருகுழை அளவோடும் மன்றல் வாரிஜ நயனமும்என்றும், அவளின் பேச்சை, “இளகிய ரஞ்சிதாம்ருத வசனமும்என்றும் பாடியுள்ளார் [பஞ்ச பாதகம் உறு - திருச்செந்தூர்].

தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளிஎன்று கந்தர் அலங்காரம் பாடல் 9 இல் பாடுகிறார்.


அடுத்து, வள்ளியின் (ஜீவாத்மாவின்) பக்குவம் அடைந்த நிலை பற்றி வருகிறது. 

தனச் செவ்வி

மார்பகங்களின் பக்குவம் அடைந்த நிலையால் (வனப்பு)..

குறச்சேரிக்கு வடு விளைந்தது

குறச்சேரிக்குகுறவர் குடிலுக்கு

வடு விளைந்தது – (முருகன், வள்ளியைக் களவு மணம் செய்து கொண்டதால் [ஆட்கொண்டு அழைத்துச் சென்றதால்]) அபவாதம் ஏற்பட்டது.

அன்றே நன்று - [இதை இறுதியில் பார்ப்போம்]

தெள் திரை நீர் சேரி கு அடு கடைநாளிலும் சிதைவற்ற செவ்வேள் சேரி குவடு புடைசூழ் புனத்தில் தினை விளைவே

தெள் திரை நீர்தெள்ளிய அலைகளை உடைய கடல் நீர்

சேரிஒன்று சேர்ந்து

குபூமியை

அடுசூழ்ந்து அழிக்கும்

கடைநாளிலும்பிரளய காலத்திலும்

சிதைவற்றஅழியாத

செவ்வேள்முருகப்பெருமானுடைய

சேரிஇருப்பிடம்

குவடுமலையில் (வள்ளி மலை)

புடை சூழ்சாரலில்

புனத்தில் – தினைப்புனத்தில்

தினை விளைவேதினைப்பயிரின் விளைச்சல்

தெள்ளிய அலைகள் உடைய கடல் நீர், ஒன்று சேர்ந்து, பூமியைச் சூழ்ந்து அழிக்கும் பிரளய காலத்திலும் அழியாத முருகப்பெருமானின் இருப்பிடமான மலைக்குப் பக்கத்தில் இருக்கும் வயலில் தினைப்பயிர்களின் விளைச்சல்

அன்றே நன்று:

அன்றேஅப்பொழுதே

நன்று – செம்மையாக இருந்தது

முருகனின் பெருமையைப் பற்றி முதலில் சொல்லி, அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வயலில், தினை விளைச்சல் நன்றாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

செய்யுள் உட்கருத்து:

வள்ளி புனத்தில், தினைப்பயிர் முதிர்ச்சி அடைந்துவிட்டது. இது, வள்ளியின் பக்குவம் அடைந்த தன்மையைக் குறிக்கிறது. எனவே, முருகப்பெருமான் அவளை ஆட்கொண்டுவிட்டான். இதனால், கரும்பு போன்ற மொழியும், மாவடு போன்ற விழியும் கொண்ட வள்ளிநாயகியை முருகன் மணம் செய்து கொண்டதால், குறவர் குடிக்கு அபவாதம் உண்டாயிற்று. உண்மையில் இது அபவாதம் ல்லை. பக்குவப்பட்ட ஜீவனை, அதற்கு உரியவன் (பரமாத்மா) ஆட்கொண்டு தன்னோடு சேர்த்துக்கொண்டான். இந்நிலை, ஜீவாத்மாவானது, இருவினையொப்பும், மலபரிபாகமும் பெற்றுப் பரமாத்மாவின் திருவருளுக்குப் பாத்திரமானதைக் குறிக்கிறது.

பக்குவம் அடைந்த ஜீவாத்மா மேல் பரமாத்மா எந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பார் என்பதை நமக்குக் காட்டவே இந்தக் களவு மண நாடகம்.

அறிவிலாப் பித்தர் என்ற காஞ்சிபுரப் பாடலில், “குறவர் கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று, குருவியோட்டித்திரிந்த தவமானை, குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த குமரக்கோட்டத்து அமர்ந்த பெருமாளேஎன்று பாடுகிறார்.


பொழிப்புரை:

பிரளய காலத்திலும் அழிவில்லாத முருகப்பெருமானின் இருப்பிடமான மலைக்கு அருகில் இருக்கும் வயலில், தினை நன்றாக விளைந்து இருந்தது. அப்பயிர்க்கு உரியவன், உரிய காலத்தில் அறுவடை செய்து அதனை எடுத்துச் செல்வான். அதுபோல, பக்குவம் அடைந்த ஜீவாத்மாவான வள்ளியை, உரிய காலத்தில், அவளுக்கு உரியவனான முருகப்பெருமான், அவளை ஆட்கொண்டு, அழைத்துச்சென்றான். இந்தச் செயல் அபவாதம் ஏற்படுத்தியது என்று சொல்வதற்கே இடமில்லை.

Comments