கந்தர் அந்தாதி - செய்யுள் 16
சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்த்தினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே
பதம் பிரித்த வடிவம்:
சேவற்கு ஒடியும் பல் நிசாந்தகனும் திருக்கரத்துச்
சேவல் கொடியும் கொடிய கண்டாய்; தினைசூழ்புனத்துச்
சேவல் கொடி உந்தி வளத்தவளும், தந்திக் களபச்
சே வல் கொடியும் உடையாய்! பிரியினும் சேரினுமே
பொருள்:
நாயகனாம் முருகனைப் பிரிந்திருக்கும் நாயகி, தன் பிரிவு ஆற்றாமையை அவனிடம் தெரிவிப்பதாக அமைந்துள்ள பாடல்.
சூரியனும், சேவலும் தனது எதிரிகள் என நாயகி கூறுதல்:
சேவற்கு ஒடியும் பல் நிசாந்தகனும், திருக்கரத்துச் சேவல் கொடியும் கொடிய கண்டாய்
சேவற்கு ஒடியும் பல் நிசாந்தகனும்:
சேவற்கு – ரிஷப வாகனம் உடைய சிவபெருமானால் (தக்ஷ யாகத்தில்)
ஒடியும் பல் – ஒடிக்கப்பட்ட பல்லை உடைய
நிசாந்தகனும் – இருளை (நிசி) அழிக்கும் (அந்தகன்) – சூரியனும்
திருக்கரத்துச் சேவல் கொடியும்:
திருக்கரத்து – நீ கையில் ஏந்தி இருக்கும்
சேவல் கொடியும் – கொடியாக உள்ள சேவலும்
கொடிய கண்டாய்:
பொல்லாதனவாக உள்ளனவே!
“ரிஷபத்தின் மேல் ஏறி வரும் சிவபெருமானால் பல் ஒடிக்கப்பட்ட சூரியனும், உன் கையில் உள்ள கொடியாகிய சேவலும் என் வருத்தத்தை அதிகப்படுத்துகின்றன” என்று நாயகனான முருகனிடம் நாயகி கூறுகிறாள்.
முருகனை, “வள்ளியோடும், தேவசேனையோடும் சேர்ந்திருப்பவனே!” என்று அழைக்கிறாள்.
தினை சூழ் புனத்து சேவல் கொடி உந்தி வளத்தவளும் –
தினை சூழ் புனத்து – தினைப்பயிர்கள் நிறைந்து விளைகின்ற காட்டை
சேவல் – காவல் புரியும்
கொடி – நீண்ட
உந்தி வளத்தவளும் – காட்டாற்றின் வளப்பத்தை அனுபவிப்பவளான வள்ளியையும்
தினைப்பயிர்கள் நன்றாக விளைந்திருக்கும் சோலையில் காவல் புரிபவளும், நீண்ட காட்டாற்றின் வளப்பத்தை அனுபவிப்பவளுமான வள்ளியை ஒரு புறத்தும்…
(வரைத்தேன் பெருகு உந்திமிர் என்று கந்தர் அந்தாதிப் பாடல் 7 இல் வள்ளியைப் பற்றிய குறிப்பு வருகிறது).
தந்திக் களபச் சே வல் கொடியும் -
தந்தி – ஐராவதம் என்னும் யானை வளர்த்த
களப – சந்தனம் பூசி இருக்கும்
சே – சிவந்த
வல் – சொக்கட்டான் கருவி போன்ற உருவமுடைய தன பாரங்களையும்
கொடியும் – கொடி போன்ற இடையை உடையவளுமான தேவசேனையையும்
ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்டவளும், சந்தனம் பூசப்பட்டதும், சிவந்த நிறம் உடையதும், சொக்கட்டான் கருவி போன்றதுமான மார்பகங்களை உடையவளும், கொடி போன்ற இடையை உடையவளுமான தேவசேனையை மற்றொரு புறத்தும்…
(கந்தர் அந்தாதி 7 ஆம் பாடலில், தேவசேனையை, அத்திமிர் என்று சொல்லும் குறிப்பு வருகிறது).
உடையாய் – உடையவனே
பிரியினும் – நான் உன்னைப் பிரிந்து இருக்கும் பகல் பொழுது சீக்கிரம் முடியாமல் நெடுநேரம் தொடரச் செய்யும் சூரியனும் (சேவற்கு ஒடியும் பல் நிசாந்தகன்)
சேரினுமே – உன்னோடு சேர்ந்திருக்கும் இரவுப்பொழுதை, கூவி, விரைவிலேயே முடித்து வைக்கும் சேவலும் (திருக்கரத்துச் சேவல் கொடி)
இவ்விரண்டுமே எனக்குப் பகையாக உள்ளன.
.jpg)
Comments
Post a Comment