கந்தர் அந்தாதி - செய்யுள் 14
செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே
பதம் பிரித்த வடிவம்:
செம் திலகத்து அலர் வாள் நுதல் வேடிச்சி முகம்
(பங்க) செம்; திலகத்து அலர் துண்டம்; என்னா நின்ற சேய!
(சங்க) செந்து இலகத் தலராசி தந்தானைச் சிறை இட்ட வேல்
செந்தில்; அகத்து அலர் தூற்றிடும் கேள்; துதி வாகு அருளே
பொருள்:
இப்பாடலில், நாயகனான முருகனை நாயகி அழைத்து, அவனுடைய புயங்களைத் தந்தருள வேண்டும் என்று வேண்டுகிறாள்.
வள்ளியின் முகம், மூக்கு ஆகியவை எப்படி இருக்கின்றன என்று முருகன் நலம் புனைந்து உரைத்ததாக முதலில் வருகிறது. அலர் அறிவுறுத்தல் எனும் துறையைச் சேர்ந்த பாடல்.
வள்ளியின் முகம்
செம் திலகத்து அலர் வாள் நுதல் வேடிச்சி முகம் பங்கசெம்
செம் திலகத்து – சிவந்த குங்குமப் பொட்டு இட்டு
அலர் – விளங்கும்
வாள் நுதல் – ஒளி வீசும் நெற்றியுடைய
வேடிச்சி – வள்ளியின்
முகம் – வதனம்
பங்கசெம் – தாமரையைப் போன்றது.
சிவந்த குங்குமப் பொட்டு இட்டு விளங்கும், ஒளி பொருந்திய நெற்றியை உடைய வள்ளியின் முகமானது, தாமரையைப் போன்றது.
வள்ளியின் முகம் பற்றிய வர்ணனை வரும் சில பாடல்கள்:
- வதன சரோருக நயன சிலீமுக [சரோருகம் = தாமரை] [வதன சரோருக - வெள்ளிகரம்].
- சந்த்ர முக பாவை வஞ்சி – [தேனிருந்த இதழார் – திருப்பந்தணைநல்லூர்]
வள்ளியின் மூக்கு
திலகத்து அலர் துண்டம்
திலகத்து அலர் – எள்ளின் பூ [திலகம் – எள்; அலர் – பூ]
துண்டம் – மூக்கு
வள்ளியின் மூக்கு, எள்ளின் பூவைப் போன்றது.
என்னா நின்ற சேய
அடுத்து, முருகன் வள்ளியை இவ்வாறு நலம் புனைந்து உரைத்தான் என்று கூறுகிறார்.
என்னா – என்று
நின்ற – உரைத்த
சேய – குமரனே
வள்ளியின் முகம் – தாமரை, மூக்கு – எள்ளின் பூ என்றெல்லாம் நலம் புனைந்து உரைத்த குமரா!
அடுத்ததாக, முருகப்பெருமான், பிரணவத்தின் பொருள் தெரியாத காரணத்தால், பிரமனைச் சிறையில் அடைத்தது பற்றிப் பாடுகிறார்.
சங்க செந்து இலக தலராசி தந்தானைச் சிறை இட்ட வேல் செந்தில்
சங்க – ஜீவராசி
செந்து – கூட்டம்
இலக – வசிக்க
தலராசி – பூமியை
தந்தானை – படைத்த பிரமனை
சிறை இட்ட – சிறையில் அடைத்த
வேல் – வேலாயுதத்தை உடைய
செந்தில் – செந்தில் ஆண்டவன்
ஜீவராசிகள் வசிப்பதற்கு பூமியைப் படைத்த பிரமனைச் சிறையில் இட்ட, வேலாயுதத்தை உடைய செந்தில் ஆண்டவனே!
பிரமனைச் சிறையிட்டது பற்றி வரும் சில பாடல்கள்:
- கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர் செய்து கன்றச் சிறையிடு மயில்வீரா [வஞ்சத்துடன் ஒரு – திருச்செந்தூர்]
- நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை [திருவெழுகூற்றிருக்கை]
- வேதநான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு வீற மோதின மறவா [காணொணாதது – தேவனூர்]
முருகன் சூரனைச் சம்ஹாரம் செய்து, தேவர்களைக் காத்துத் தேவசேனையை மணந்த பின்னர், “நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல்” என்றார். அப்போது, அருகில் இருந்த பிரமன், “இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ” என்று நீதியற்ற உரையைக் கூறினான். இதைக் கேட்ட முருகப்பெருமான், “நம் கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சக்தி உண்டோ?” என்று கூறிக் கோபித்துக்கொண்டு, “இங்ஙனம் கூறிய நீ, மண்ணிடைச் செல்வாய்” என்று சபித்தார்.
“வள்ளியின் முகத்தையும் மூக்கையும் பெருமையாகப் பேசிய குமரனே! பிரமனைச் சிறையிட்ட செந்திலாண்டவனே! உன் புயங்களைத் தந்தருள்வாயாக” என்று வேண்டுகிறாள் நாயகி.
அகத்து அலர் தூற்றிடும் கேள் துதி வாகு அருளே
அகத்து – அகங்காரம் கொண்டு
அலர் தூற்றிடும் – வசைகள் பேசுவார்கள்
கேள் - சுற்றத்தார்கள்
துதி வாகு – எல்லோராலும் போற்றப்படும் புயங்கள் [வாகு – புயம்]
அருளே - அருள்வாயாக
அலர்தூற்றுதல் = வசைபாடுதல்.
முருகன் அருளை வேண்டி நிற்கும் நாயகி, “அகங்காரம் கொண்டு, சுற்றத்தார்கள் எல்லோரும் என்னைத் தாழ்வாகப் பேசுவார்கள். அதனால், அந்த பழி நீங்கும் பொருட்டு, அனைவராலும் துதிக்கப்படும் உனது திரள் தோள்களைத் தந்தருள வேண்டும்” என்று கேட்கிறாள்.
சுற்றத்தார் அலர்தூற்றுதல் பற்றி ஒன்பதாவது கந்தர் அந்தாதிச் செய்யுளிலும் குறிப்பிட்டுள்ளார்.
பொழிப்புரை:
வள்ளியின் திருமுகத்தை தாமரை என்றும், மூக்கை எள்ளின் பூ என்றும் வியந்து நலம் புனைந்துரைக்கும் குமரக்கடவுளே! அண்டங்களைப் படைத்த பிரமனைச் சிறையிட்ட வேலையுடைய செந்திலாண்டவனே! சுற்றத்தார் அகங்காரத்தால் அலர்தூற்றுகின்றனர். அது நீங்க, உனது பெருமை மிக்க தோள்களை, யான் தழுவும்படி அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment