கந்தர் அந்தாதி - செய்யுள் 13

தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்

தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்

தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்


தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே


பதம் பிரித்த வடிவம்:


தேங்கு ஆவன மும்மத கரி வேந்துடன் சேர்ந்த விண்ணோர்
தேம் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் இடம் மேல்
தேங்கா அனமும் தளர் நடையாய் அஞ்சல்; செண்பகப் பூம்
தேம் கா வனமும் கழுநீர் இலஞ்சியும் செந்திலுமே


பொருள்:


இந்தப் பாடல், தலைவனான குமாரக் கடவுளின் வசிப்பிடமான திருச்செந்தூர் அருகில் உள்ளதா அல்லது தொலைவில் உள்ளதா என்று எண்ணி, தலைவி (பெண்) கவலைப்படுவதை உணர்ந்த தலைவன், தலைவிக்கு, “ஊர், இதோ மிக அருகில் தான் உள்ளது” என்று ஆறுதல் கூறுவதாக அமைந்துள்ளது. இலக்கணத்தில் இடமணித்தென்றல் என்னும் துறையைச் சார்ந்தது.


இடமணித்தென்றல் = இடம் அணித்து என்றல். தலைவிக்கு, தலைவனின் இடம் அணித்து (அருகில் உள்ளது) என்று சொல்லுதல்.


முதலில் முருகனைப் பற்றிய குறிப்பினைப் பாடுகிறார்.



தேங்கு ஆவன மும்மத கரி வேந்துடன் சேர்ந்த விண்ணோர்

தேம் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் இடம் மேல்


தேங்கு ஆவன:


தேங்கு – நிறைந்திருக்கும்

ஆவன – ஆ – பசு; பசுக்கூட்டங்களை மேய்க்கும் முல்லை நில அதிபராம் திருமால்


மும்மத கரி வேந்து:


மும்மத கரி – மூன்று மதங்களைப் பொழியும் ஐராவதம்

[யானையின் கன்னம் (கபோலம்), துதிக்கை, குறி வழியாக பெருகும் மத நீர் – கன்ன மதம், கைம்மதம், கோச மதம் என முறையே கூறுவர்]

வேந்து – ஐராவதத்தின் தலைவனான இந்திரன்.


உடன் சேர்ந்த விண்ணோர்:


உடன் – திருமால், இந்திரன் இவர்களுடன்

சேர்ந்த – சேர்ந்து

விண்ணோர் – தேவர்கள்


தேம் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய்:


தேம் – இருப்பிடம் (அமராவதி)

காவல் – காப்பது

நம் முனைய வேல் பணி – தன்னுடைய கூரிய வேலின் தொழில்

எனும் சேய் – என்று கூறும் குமாரக்கடவுள்


இடம் மேல்:


இடம் – வசிப்பிடம்

மேல் – இதோ இருக்கிறது.


நிறைந்திருக்கும் பசுக்கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும், மும்மதம் பொழியும் ஐராவதத்தின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும், அவர்களது இருப்பிடமான அமராவதியையும் காப்பது தனது கூரிய வேலாயுதத்தின் தொழில் என்று சொல்லும் குமாரக்கடவுளின் இருப்பிடமானது இதோ அருகிலேயே இருக்கிறது.


தேங்கா அனமும் தளர் நடையாய் அஞ்சல்:


தேங்கா – திகைத்து நின்று

அனமும் – அன்னப் பறவையும் (“தன் நடையைத் தோற்கடிக்கிறதே” என்று)

தளர் – தளர்ந்து போகும்படியான

நடையாய் – நடையை உடையவளே!

அஞ்சல் – பயப்பட வேண்டாம்.


அன்னப்பறவையின் நடையினைத் தோற்கடித்து, அதற்குத் திகைப்பையும் தளர்வையும் ஏற்படுத்தும் நடையை உடையவளே! அஞ்சாதே. (அவன் (முருகப்பெருமானின்) வாசஸ்தலம் எவை எவை?)


செண்பகப் பூம் தேம் கா வனமும் கழுநீர் இலஞ்சியும் செந்திலுமே


செண்பக – செண்பக மலர்கள்

பூம் – விளங்கும்

தேம் – இனிய

கா வனமும் – பூஞ்சோலையும்

கழுநீர் – செங்கழுநீர்

இலஞ்சியும் – தடாகமும்

செந்திலுமே – திருச்செந்தூர் தலமுமேயாகும்


செண்பக மலர்கள் பூத்துக்குலுங்கும் இனிய சோலையும், செங்கழுநீர் நிறைந்த தடாகமும் திருச்செந்தூர் தலமுமே, முருகப்பெருமானது இருப்பிடம்.


[இலஞ்சி என்பதற்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழமரம் எனும் பல பொருள்கள் உள்ளன. இவை அனைத்தும் கொண்ட ‘இலஞ்சி’ எனும் திருத்தலமும் குற்றாலத்தை அடுத்து உள்ளது. இங்கு உறையும் முருகன், ‘இலஞ்சி முத்துக்குமரன்’ எனப்படுகிறான்.]


“உமையாள் பயந்த இலஞ்சியமே” – கந்தர் அலங்காரம்


[சரவணப் பொய்கையில் தோன்றியவனே]


“மன்னிலஞ்சி சூழு மலரிலஞ்சியும் சூழ்ந்த

தென்னிலஞ்சி வாழும் திருக்குமரன்” [இலஞ்சி முருகன் உலா]


பொழிப்புரை:


அன்னமும் தோற்கும் நடையை உடைய பெண்ணே! அஞ்சாதே! விண்ணோர்களைக் காப்பாற்றி வருவாயாக என வேலாயுதத்திற்குக் கட்டளையிட்ட குமரக்கடவுளின் இருப்பிடமாகிய செண்பக மலர்கள் நிறைந்த பூங்காவனமும், செங்கழுநீர் மடுவும், திருச்செந்திலும் இதோ வந்துவிட்டன.






Comments