கந்தர் அந்தாதி – செய்யுள் 12

சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து

சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட

சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்


சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே


பதம் பிரித்த வடிவம்:


சிறை வர வா மயில் ஏறிச், சிகரி தகர வந்து,

சிறை வர ஆமை இல் கூப்பிடத், தானவர் சேனை கொண்ட

சிறை வர, ஆம் அயில் வாங்கி தன் தேன் கழல் யான் கழலா,

சிறு ஐவர் அவாமையில் நெஞ்சு உடனே நின்று தேங்குவதே


பொருள்:


இப்பாடலில், முருகனின் திருவடிகளை அணுகி, தியானிக்காவிட்டால் மனத்தில் இருள் குடிகொள்ளும் என்று பாடுகிறார்.


சிறை வர வா மயில் ஏறி


சிறை – அழகிய தோகை

வர – அடியார்களுக்கு வரம் அளிக்கக்கூடிய தன்மை

வா – தாவிச் செல்லும் வல்லமை

மயில் – மயில் வாகனம்

ஏறி - ஏறுதல்


அழகிய தோகையையும், அடியார்களுக்கு வரங்களை வாரி வழங்கக்கூடிய தன்மையையும், தாவிச் செல்லும் வல்லமையையும் உடைய மயில் வாகனத்தில் ஏறி…


சிகரி தகர வந்து


சிகரி – கிரௌஞ்ச மலை

தகர – பொடியாகுமாறு

வந்து – எழுந்தருளி


கிரௌஞ்ச கிரி தூளாகுமாறு எழுந்தருளி…


சிறை வர ஆமை இல் கூப்பிட


சிறை – கரை

வர – வரம்பு

ஆமை இல் – ஆமைகளின் வசிப்பிடம்

கூப்பிட – அலற / ஓலமிட


கரையால் சூழப்பட்டதும் ஆமைகள் வசிக்கும் இடமானதுமான கடல் “ஓ” என்று அலறி முறையிடவும்…


தானவர் சேனை கொண்ட சிறை வர


தானவர் – அசுரர்கள்

சேனை – படை(களால்)

கொண்ட – அமைக்கப்பட்ட

சிறை – தேவர்களின் சிறை

வர – விடுதலை பெற


அசுரர்களின் சேனைகளால் கொண்டு தள்ளப்பட்ட தேவர்களின் சிறைவாசம் நீங்கவும்…


ஆம் அயில் வாங்கி தன்


ஆம் – தகுந்த

அயில் - வேல்

வாங்கி – ப்ரயோகித்த

தன் – முருகப்பெருமானின்


தகுதியுடைய வேலாயுதத்தைப் பிரயோகம் செய்த முருகப் பெருமானின்…


[அயில் வாங்கி – வேலைச் செலுத்துபவன்; இதேபோல் வள்ளியை, ‘தினையேத்தி’ என்பார் அருணகிரிநாதர் ஓரிடத்தில்]


தேன் கழல் யான் கழலா


தேன் கழல் – இனிய திருவடிகளை

யான் – நான்

கழலா – அணுகாது பிரிந்திருப்பதால்


மயிலில் ஏறி, கிரௌஞ்ச கிரி பொடிபடவும், கடலானது அலறவும், அசுரர்களால் சிறையிடப்பட்ட தேவர்கள் சிறை மீளவும் வேலாயுதத்தை எறிந்த முருகப் பெருமானின் திருவடிகளை அணுகாமல் நான் பிரிந்திருப்பதால்….


சிறு ஐவர் அவாமையில் நெஞ்சு உடனே நின்று தேங்குவதே


சிறு – சிறுமை மிக்க / அல்பமான

ஐவர் – ஐம்புலன்களின்

அவா – ஆசை என்னும்

மையில் – இருளில்

நெஞ்சு – என் இதயம்

உடனே நின்று – (அந்த இருளுடன்) சேர்ந்து நின்று

தேங்குவதே – திகைக்கின்றது (மயங்குகின்றது)


முருகன் திருவடிகளைச் சிந்திக்காததால், என் இதயம், ஐம்புல ஆசை என்னும் இருளால் சூழப்பட்டு, அந்த இருளிலிருந்து அகலாமல் நின்று மயங்குகிறது.


பொழிப்புரை:


கிரௌஞ்சம் பொடிபடவும், கடல் அலறவும், தேவர் சிறை மீளவும், வேலெடுத்துத் தாவி மயில் வாகனத்தில் ஏறிவந்த முருகப்பெருமானின் பாதத் தாமரையை நான் இடைவிடாது தியானிக்காததனால் என் இதயத்தில் ஐம்புல ஆசை எனும் இருள், அகலாமல் நிறைந்திருக்கிறது. இறைவனது திருவடித் தியானம் இருந்தால், ஐம்புல ஆசைகள் நம்மை அணுகா.


செறியும் இருவினை கரண மருவு புலனொழிய

உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே

[அறிவழிய – திருச்செந்தூர்த் திருப்புகழ்]


சிகர பூதரம் தகர நான்முகன்

சிறுகு வாசவன் சிறைமீளத்

திமிர சாகரம் கதற மாமரம்

சிதற வேல்விடும் பெருமாளே

[பகலிராவினும் – திருத்தணி]


[சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, பிரம்மாவும், இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீள, இருண்ட கடல் கொந்தளித்து அலையோசை பெருக, மா மரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே]



Comments