கந்தர் அந்தாதி - செய்யுள் 11

திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்

திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்

திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்


திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே



பதம் பிரித்த வடிவம்:

திக்க திக்கோடு படி புடை சூத தெறி
(படபத்)தி கத்து இக்கோடு உகள தடக் கடல் தடி சேப்படைச்
(சத்)தி; கத்திக் கோடு துறைத்திறத்து அற்ற; குற
(குறசத்)திக்கு அத்திக் கோடு பறித்துக்கொடு ஆதி; சிறைபிறப்பே

பொருள்:

இப்பூமியில் நமக்கு பிறப்பு இனி இருக்கக்கூடாது என்று முருகனை வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

முதலில் பூமியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

திக்க திக்கோடு படி

திக்க – நான்கு திசைகள்
திக்கோடு – திகைக்கும் படி பரந்து இருத்தல் (திக் – திகைப்பு)
படி – பூமி

நான்கு திசைகளிலும் எல்லோரும் திகைக்கும் வகையில் பரந்து இருக்கும் இந்தப் பூமியில்…

அடுத்து, முருகனை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

புடை – நீக்கி அருள்வாயாக. (புடைத்தல் என்றால் தானியங்களிலிருந்து கல், மண், பிற தூசுகள் ஆகியவற்றை நீக்குதல்).

எதை நீக்கி அருள வேண்டும் என்பதைப் பாடலின் இறுதியில் கூறுகிறார்.

முருகனை மூன்று விதமாக இங்கு அழைக்கிறார்.

1. சூதத் தெறி படபத்தி கத்து இக்கோடு உகள தடக் கடல் தடி சேப்படைச் சத்தி

சூத – மாமரம் (கடலில் மா மரமாய் நின்ற சூரபத்மன்)
தெறி – தெளிவாகத் தெரியும் படி
படபத்தி – ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதி சேஷன்
கத்து – தலை
இக்கோடு – இந்த சங்குகள்
உகள – ஊறும்படி
தட – அகன்ற
கடல் – கடலின் கண்
தடி – அடக்கி அழித்த
சேப்படைச் சத்தி – சிவந்த வேலாயுதம் உடையவன்

ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலைகளின் மேல் சங்குகள் எல்லாம் ஊறும் படி இருக்கும் பெரிய கடலுக்கு அடியில் மா மரமாய் மறைந்து நின்ற சூரபத்மன் வெளியே தெரியுமாறு, அக்கடலை அடக்கி அழித்த சிவந்த வேலாயுதத்தை உடையவனே..

சங்குகள் ஏன் ஆதிசேஷனின் தலையின் மேல் ஊறுகின்றன? 

ஆதிசேஷன் பாதாளத்தில் இருந்துகொண்டு, இந்த அண்டத்தைத் தன் தலையில் தாங்குகிறான். “அதல சேடன்” என்று ஆதிசேஷனை அருணகிரிநாதர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். கடலால் சூழப்பட்ட இந்த பூமியானது (ஜலமிடை பூ என்று இருமலுரோக என்னும் திருப்புகழில் பாடியுள்ளார்) சேஷனின் தலைக்கு மேல் இருக்கும்போது, கடலில் உள்ள சங்குகள், சேஷனின் தலையின் மேல் ஊறும்.

2. கத்திக் கோடு துறைத்திறத்து அற்ற

கத்தி – கதறி (ஆரவாரத்துடன் வாதம் செய்கின்ற)
கோடு - மாறுபட்ட
துறைத்திறத்து – பர சமயக் கோட்பாடுகள் (சமணம் முதலான வேத நெறிக்கு மாறுபட்ட சமயங்கள்)
அற்ற – நீங்கி நிற்பவன்

வாதம் செய்வதில் ஈடுபாடும், மாறுபட்ட கருத்துகளைத் தன்னிடத்தே கொண்டதுமான பரசமயங்களிலிருந்து விலகி நிற்பவனே…

3. குற, குறச்சத்திக்கு அத்திக்கோடு பறித்துக்கொடு ஆதி!

குற – உலக்கையால் தானியங்களைக் குத்த
குறச்சத்திக்கு – வள்ளிக்கு
அத்தி – யானை
கோடு – தந்தம்
பறித்துக்கொடு – பறித்துக்கொடுத்த
ஆதி – ஆதி மூலம்

தினை முதலிய தானியங்களில் உள்ள தூசுகளை, உலக்கையால் குத்தி அவற்றை நீக்க, அந்த வள்ளிக்கு, யானைத் தந்தத்தை, உலக்கையாக கொடுத்த ஆதியே…

இரக்கும் அவர்க்கு” எனத் தொடங்கும் திருவிடைக்கழித் திருப்புகழில்,

கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக்
     கழைத்தரளத்தினைத் தினையில் ...... குறுவாளை

என்று பாடுகிறார்.

[துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல் இடித்து விளையாடுபவளான வள்ளி]

இப்போது எதை நீக்கி, முருகன் அருள வேண்டும் என்று வேண்டுகிறார் எனப் பார்ப்போம்.

சிறைபிறப்பே – ஐந்து இந்திரியங்களால் கட்டுண்ட (சிறைப்படுதல் - கட்டுப்படுதல்) நமது பிறப்பினை நீக்கி அருள வேண்டும் என்கிறார்.

பொழிப்புரை:

கடலில் மா மரமாய் நின்ற சூரபத்மனை வேல் கொண்டு அழித்தவனே! மாறுபட்ட கருத்துகளை உடைய பர சமயக் கோட்பாடுகளிலிருந்து நீங்கி நிற்பவனே! தானியங்களைக் குத்த, வள்ளிக்கு, உலக்கையாக யானையின் தந்தத்தைக் கொடுத்தவனே! நான்கு திக்கும், திகைப்புறும் படி, பரந்து விரிந்துள்ள இந்தப் பூமியில், பஞ்சேந்திரியங்களால் கட்டுண்ட பிறப்பை மீண்டும் நான் அடையாது, அதனை நீக்கி அருள்வாயாக. 




Comments