கந்தர் அந்தாதி – செய்யுள் 10

திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்

திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க

திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க

திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே 


பதம் பிரித்த வடிவம்:

திர ளக்க ரக்கரை வென் கண்ட வேலன்; திசைமுகன் மால்

திரள் அக்கர் அக்கர் ஐ; யான் பாட நாடுதல், செய்ய சங்கு

(அ)திர் அளக்கர் அக்கரை காண்பான் கை நீத்திசைவார், 

(பனிக்க)திர் அளக் கரக்கரை வான் நீட்டு மைந்தர் புந்திக்கு ஒக்குமே


பொருள்:

அவை அடக்கமாக இப்பாடல் அமைந்துள்ளது.

முருகப்பெருமானை பின்வருமாறு பாடுகிறார் அருணகிரிநாதர்.


திர ளக்க ரக்கரை வென் கண்ட வேலன்

திர – ஸ்திரமான - அசைக்கமுடியாத

ளக்க - லட்சக்கணக்கான

ரக்கரை - அசுரர்களை

வென் கண்ட – வெற்றி கொண்ட

வேலன் – வேலாயுதனை

அசைக்கமுடியாத பலம் கொண்ட, லட்சக்கணக்கான அசுரர்களை வெற்றி கொண்ட வேலனை..


திசைமுகன் மால் திரள் அக்கர் அக்கர் ஐ

திசைமுகன் - பிரம்மன்

மால் - திருமால்

திரள் அக்கர் – ஆயிரம் கண்களை உடைய இந்திரன். (திரள் – திரண்ட, நிறைய)

அக்கர் – ருத்திராக்ஷம் அணிந்த சிவபெருமான் (அக்கு – ருத்திராக்ஷம்)

ஐ – இவர்களுக்கெல்லாம் இறைவன் ஆகிய முருகப்பெருமான்

பிரம்மன், விஷ்ணு, இந்திரன், சிவபெருமான் இவர்களுக்கெல்லாம் இறைவனாகிய கந்தக் கடவுளை..


அடுத்து, கந்தக் கடவுளைத் தான் பாட நினைத்தல் எப்படி இருக்கிறது என்று கூறுகிறார். இரண்டு உதாரணங்களை மொழிந்து அவற்றிற்குச் சமமானது என்கிறார்.


யான் பாட நாடுதல் – நான் புகழ்ந்து பாட நினைப்பது


செய்ய சங்கு அதிர் அளக்கர் அக்கரை காண்பான் கை நீத்திசைவார்

செய்ய - சிவந்த

சங்கு - சங்குகள்

அதிர் - முழங்கும்

அளக்கர் - கடல்

அக்கரை – கடந்து சென்று மறுகரையை அடைய

காண்பான் - நினைப்பவன்

கை நீத்திசைவார் – நீந்திச் செல்லும் புத்தி

சிவந்த சங்குகள் முழங்குகின்ற கடலைக் கடந்து செல்ல நினைத்து, நீந்தியே கடந்துவிடுவேன் என்று சொல்பவர்…


பனிக்கதிர் அளக் கரக்கரை வான் நீட்டு மைந்தர் 

பனிக்கதிர் – நிலா

அள – பிடிக்கும் பொருட்டு

கரக்கரை – கையளவை

வான் நீட்டு – ஆகாயத்தில் நீட்டும்

மைந்தர் – சிறு பிள்ளை

நிலவைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தன் கையினை, வான் நோக்கி நீட்டும் சிறு பிள்ளை…


புந்திக்கு ஒக்குமே – கடலைக் கடந்து செல்பவன், நீந்தியே கடந்துவிடுவேன் என்று சொல்பவர், நிலவைப் பிடிப்பதற்காக வானத்தை நோக்கி, கையை நீட்டும் சிறு பிள்ளை இவர்களின் புத்தியைப் போன்றது.


கம்ப ராமாயணத்தில், அவை அடக்கப் பாடலில், “பூனை ஒன்று நக்கியே பாற்கடலைக் குடித்துவிடுவேன் என்று சொல்வது போல் இருக்கிறது, நான் இராமாயணத்தை எழுத முயற்சிப்பது” என்று பாடியுள்ளார் கம்பர்.


“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசில் கொற்றத்து இராமன் கதை அரோ”


என்று பாடுகிறார்.


பொழிப்புரை:

வலிமை நிறைந்த லட்சக்கணக்கான அசுரர்களை வெற்றி கொண்ட வேலனை, பிரம்மன், விஷ்ணு, இந்திரன், சிவபெருமான் இவர்கள் வணங்கும் கந்தனை, அடியேன் பாட நினைத்தல், கடலைக் கடக்க நினைத்து, கைகளாலேயே நீந்திக் கடக்க முயற்சி செய்பவரின் புத்திக்கும், நிலவைப் பிடிக்க வானத்தை நோக்கிக் கையினை நீட்டும் சிறு பிள்ளையின் புத்திக்கும் சமமாகும்.




Comments

Post a Comment