கந்தர் அந்தாதி - செய்யுள் 9

சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்

சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்

சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்

சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே  


பதம் பிரித்த வடிவம்:

சிலை மதன் அம்பு அடுமாறு எழும்; சேய் மயில் உச்சிட்ட

(எச்)சிலை, மதனம் படு சிந்துவை, இந்துவை செய்வது என் யான்?

சிலை மதம் நம் படு காட்டுவர் கேளிரும்; செங்கழுநீர்

சிலை மது அனம் படு தாமரை வாவி திரள்சங்கமே


பொருள்:

இந்தப் பாடல், முருகனைக் காண வேண்டும் என்ற ஆசை இருந்தும், அவனைக் காண முடியாததால், விரகதாபம் கொண்ட பெண், சங்கு இனங்களை நோக்கிப் பேசுவதாக அமைந்துள்ளது. 

சங்கினங்களிடம் தன் மனக்கவலையைக் கூறுதல்:

சிலை மதன் அம்பு அடுமாறு எழும்

சிலை – கரும்பு வில்

மதன் – மன்மதன்

அம்பு – பாணம்

அடுமாறு – கொல்வது போல்

எழும் – தாக்குகிறது

கரும்பு வில்லைக் கையில் தாங்கியுள்ள மன்மதனின் பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது.

மன்மதன் கையில் வைத்திருக்கும் ஐந்து மலர் அம்புகள் – தாமரை, நீலோற்பலம், முல்லை, அசோகம், மா.


சேய்மயில் உச்சிட்ட எச்சிலை, மதனம் படு சிந்துவை, இந்துவைச் செய்வது என் யான்?

1. சேய்மயில் உச்சிட்ட எச்சிலை

சேய் – குமரக்கடவுள்

மயில் – மயில் வாகனம்

உச்சிட்ட – மயிலின் எச்சிலாகிய பாம்பு (முருகனின் மயில் வாகனமானது, பாம்பினைத் தன் வாயில் கவ்விக்கொண்டு இருக்கும். அதனால், மயிலின் எச்சில் – பாம்பு)

எச்சிலை – பாம்பின் எச்சில் – அதன் மூச்சுக்காற்று – அதுவே தென்றல். 

விரகதாபத்தால் தவிக்கும் பெண்ணிற்கு, தென்றல் காற்று கூட, பாம்பின் விஷ மூச்சு போல் விரும்பத்தகாத ஒன்றாக இருக்கிறது.

குமரக்கடவுளின் வாகனமாகிய மயிலின் வாயில் இருக்கும் பாம்பின் மூச்சுக்காற்றான தென்றலை….


2. மதனம் படு சிந்துவை 

மதனம் – கடைதல் 

படு – (கடையப்)பட்ட

சிந்து – கடல்

அமுதத்தை எடுக்க வேண்டி, தேவர்களும் அசுரர்களும் முயன்ற அன்று, அவர்களால் கடையப் பட்ட கடலை 


3. இந்துவை - சந்திரனை


செய்வது என் யான்? – யான் என்ன செய்து கடப்பேன். அவை வருத்துகின்றன.


தென்றல் காற்று, கடல், சந்திரன் இவை எல்லாம் என் தாபத்தை அதிகப்படுத்துகின்றன. 


சிலை மதம் நம் படு காட்டுவர் கேளிரும்

சிலை – ஆர்ப்பாட்டம் / அஹங்காரம்

மதம் – கோபம்

நம் படு – நம் மீது

காட்டுவர் – காட்டுவார்கள்

கேளிரும் – சுற்றத்தார் எல்லாரும்

சுற்றத்தார் எல்லாரும் அவர்களது அஹங்காரத்தை, கோபத்தை என் மேல் காட்டுகிறார்கள்.


சங்கினங்களை அழைத்தல்:

செங்கழுநீர்ச் சிலை மது அனம் படு தாமரை வாவி திரள் சங்கமே!

செங்கழுநீர் – நீலோற்பல மலர்

சிலை – பூத்துக்குலுங்கும் திருத்தணிகை மலை

மது – தேன்

அனம் படு – அன்னப்பறவைகள் நிறைந்திருக்கும்

தாமரை வாவி – தாமரைத் தடாகம்

திரள் சங்கமே – சங்குக் கூட்டங்களே

நீலோற்பல மலர்கள் பூத்துக் குலுங்கும் திருத்தணிப் பதியில், தேனும், அன்னப்பறவைகளும் நிறைந்திருக்கும் தாமரைத் தடாகத்தில் வசிக்கும் சங்கினங்களே!


பொழிப்புரை:

திருத்தணிப்பதியில் தாமரைத் தடாகத்தில் வாழும் சங்குக் கூட்டங்களே! மன்மதன், என் மேல், தன் அம்பினைப் ப்ரயோகம் செய்கிறான். தென்றல், கடல், சந்திரன் ஆகியவை என் தாபத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றன. சுற்றத்தார்களும் தங்கள் கோபத்தை என் மீது காட்டுகின்றனர். இவற்றிலிருந்து நான் எப்படி மீளுவது? சொல்வாயாக.


பின் குறிப்பு:

இறைவனிடம் நம் மனக்கருத்தைத் தெரிவிக்க வேண்டுமெனில், ஏதாவது ஒரு பொருளிடம் நம் கருத்தைச் செய்தியாகச் சொல்லித் தூது அனுப்புவது வழக்கம். அது போல, இப்பாடலில், சங்கினைத் தூது அனுப்புகிறாள் பெண். மயில் விடு தூது, சந்தனம் விடு தூது, வண்டு விடு தூது என்றெல்லாம் பழந்தமிழ் இலக்கணத்தில் உண்டு. பழநி மலை முருகன் மீது புகையிலை விடு தூது என்ற ஒரு இலக்கியப் படைப்பும் உள்ளது!

Comments