கந்தர் அந்தாதி - செய்யுள் 8
சீதனங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே
பதம் பிரித்த வடிவம்:
சீ தனம் கோடு புயம் கை கொண்டார் தம் திருமருக
சீதன் அம் கோடு முடியாளர் சேய் தனக்கு ஏது உளதோ?
சீ தனம் கோள் துனி தரும் என்பார் தொழும் தேவி பெறும்
சீதனம் கோடு கொடி வேல் மயூரம் சிலை அரசே
பொருள்:
இப்பாடலில் திருமாலின் மருகன், சிவபெருமானின் மகன் என்று முருகனை வர்ணித்து, அவன், வள்ளியை மணம் செய்து கொண்டதற்குக் கிடைத்த சீதனம் என்னென்ன என்று பாடுகிறார்.
சீ தனம் கோடு புயம் கை கொண்டார் தம் திருமருக
சீ – ஸ்ரீ – லக்ஷ்மி தேவி
தனம் – மார்பகம்
கோடு – சங்கு
புயம் – திருத்தோள்
கை – திருக்கரம்
கொண்டார் தம் – தரித்துள்ள திருமாலின்
திருமருக – சீருடைய மருகன்
லக்ஷ்மி தேவியின் மார்பகத்தைத் தம் தோளிலும், பாஞ்சஜன்யமாகிய சங்கைத் தம் கரத்திலும் தரித்துள்ள திருமாலின் மருகன்
சீதன் அம் கோடு முடியாளர் சேய்
சீதன் – குளிர்ந்த கிரணம் உடைய சந்திரன்
அம் கோடு – அழகிய வளைவு (பிறை)
முடியாளார் – சிரசை உடைய சிவபெருமான்
சேய் – மகன்
குளிர்ந்த கிரணம் உடைய சந்திரனின் பிறையைத் தன் தலையில் தரித்துள்ள சிவபெருமானின் மகன்
தனக்கு ஏது உளதோ?
திருமாலின் மருகனும், சிவபெருமானின் மகனுமான முருகனுக்கு என்ன சொத்து உள்ளது?
சீ தனம் கோள் துனி தரும் என்பார் தொழும் தேவி பெறும் சீதனம்
சீ – இகழத்தக்க
தனம் – செல்வம்
கோள் – குற்றம்
துனி – துன்பம்
தரும் – கொடுக்கும்
என்பார் – என்று சொல்லும் ஞானியர்
தொழும் தேவி – வணங்கும் வள்ளியின் மூலம்
பெறும் – கிடைத்த
சீதனம் - சீர்வரிசை
இகழத்தக்க செல்வமானது, குற்றத்தையும் துன்பத்தையும் தரும் என்று சொல்லி, அதன் மேல் ஆசை வைக்காது, விலகி இருக்கும் ஞானியர் வணங்கும் தெய்வமான வள்ளியை மணந்து கொண்டதால் முருகனுக்குக் கிடைத்த சீர்வரிசை…
கோடு கொடி வேல் மயூரம் சிலை அரசே
கோடு – ஊது கொம்பு
கொடி – சேவல் கொடி
வேல் - வேலாயுதம்
மயூரம் – மயில் வாகனம்
சிலைஅரசு – மலைகளை ஆளும் உரிமை
ஏ - இவைகளே
ஊதுகொம்பு, சேவல் கொடி, வேலாயுதம், மயில் வாகனம், மலைகளை ஆளும் உரிமை இவையே.
கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச்சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கிவிட்டது; கோடு குழல்
சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே
(கந்தர் அலங்காரம் 24)
[ஊதுகொம்பு, புல்லாங்குழல், உடுக்கை போன்ற மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடர்களின் இடமான குறிச்சிக்குச் (வள்ளிமலைக்கு) சென்று, அவர்களின் புதல்வியான வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள முயன்றவனே].
இந்தக் கந்தர் அந்தாதியை, மேற் குறிப்பிட்டுள்ள கந்தர் அலங்காரப் பாடலோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
பொழிப்புரை:
திருமால் மருகனும், சிவகுமரனுமான முருகனுக்கு, வள்ளியை மணந்ததால் கிடைத்த சீர் வரிசை - ஊதுகொம்பு, சேவல் கொடி, வேலாயுதம், மயில் வாகனம், மலைகளை ஆளும் உரிமை ஆகியவையே.
.jpg)
Comments
Post a Comment