கந்தர் அந்தாதி – செய்யுள் 7

திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்

திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்

திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே

திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே

பதம் பிரித்த வடிவம்:

திமிர திமி ரக்க தரங்கம் கோப! செவ்வேல! கைவேல்

திமிர திமி ரக்க குலாந்தக! “வரைத்தேன் பெருகு

(உந்)திமிர் அத்திமிர் அத்தனை ஆவி ஆளும்” என் சேவகனே!

திமிரத் திமிர கனலாய சந்தன சீதளமே!

பொருள்:

இப்பாடல், விரகதாபத்தால் அவதியுறும் பெண் பேசுவதாக அமைந்துள்ளது. முருகனைப் பிரிந்து இருப்பதால், சந்தனம் முதலான குளிர்ந்த பொருள்கள் எல்லாம், நெருப்பைப் போல் தகிக்கிறது என்று பாடுகிறாள்.

முருகனை மூன்று விதமாக அழைக்கிறாள்.

1. திமிர திமி ரக்க தரங்கம் கோப செவ்வேல

2. கைவேல் திமிர திமி ரக்க குலாந்தக

3. வரைத்தேன் பெருகு உந்திமிர் அத்திமிர் அத்தனை ஆவி ஆளும் என் சேவகனே


திமிர திமி ரக்க தரங்கம் கோப செவ்வேல

திமிர – இருள் நிறைந்ததும்

திமிரக்க – திமி – திமிங்கிலம். ரக்க – இருப்பிடம். திமிங்கிலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதுமான

தரங்கம் – சமுத்திரத்தை

கோப – கோபித்த

செவ்வேல – சிவந்த வேலாயுதத்தை உடையவனே

இருள் நிறைந்ததும், திமிங்கிலங்கள் வாழும் இடமானதுமான கடலின் மேல் கோபம் கொண்ட, சிவந்த வேலாயுதத்தை ஏந்தியவனே.


கைவேல் திமிர திமி ரக்க குலாந்தக

கை வேல் – கையில் உள்ள வேலாயுதமும்

திமிர திமி – மழுங்கும் அளவிற்குக் குற்றிய

ரக்க குலாந்தக – அசுர (ரக்க – அரக்க) குலத்திற்கு எமன் போன்றவனே

கையில் ஏந்திய வேலாயுதத்தின் கூர்மை மழுங்கும் அளவிற்கு, அசுரர்களைக் குற்றிய காலனே!


வரைத்தேன் பெருகு உந்திமிர் அத்திமிர் அத்தனை ஆவி ஆளும் என் சேவகனே

வரைத்தேன் பெருகு – மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகி வரும்

உந்திமிர் – காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளி நாயகியே!

அத்திமிர் – அத்தி – யானை. ஐராவத்தால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே!

அத்தனை ஆவி ஆளும் – நன்றாக என்னை அணைத்துக்கொண்டு, என் உயிரைக் காப்பற்றுங்கள்

என் – என்று சல்லாபம் பேசும்

சேவகனே – வீரனே

“மலையிலிருந்து தேனருவியாய் வரும் காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளியே! ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வயானையே! இருவரும் என்னை நன்றாக அணைத்துக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று சல்லாபம் பேசும் வீரனே. 

“பணி யா?” என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே என்று கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.

முருகனை அழைத்து, முடிவில், தன் தாபத்தைத் தெரிவிக்கிறாள்.


திமிரத்திமிர கனலாய சந்தன சீதளமே

திமிர திமிர - பூசப்பூச

கனலாய – கனல் (நெருப்பு) போல தகிக்கின்றன

சந்தன – சந்தனமும்

சீதளமே – மற்ற குளிர்ந்த வஸ்துக்களும்

முருகா! உன்னையே நினைத்து வாடும் எனக்கு, சந்தனமும் மற்ற குளிர்ச்சி மிகுந்த பொருள்களும் பூசப்பூச நெருப்பு போல தகிக்கின்றன.


பொழிப்புரை:

திமிங்கிலங்கள் வாழும் இருண்ட கடலைக் கோபித்து, வேலை எறிந்தவனே! வேலும் மழுங்கும்படியாக, அரக்கர்களைக் குற்றி, அவர்கள் குலத்தை அழித்தவனே! வள்ளி, தெய்வயானை எனும் நாயகிமார் தழுவும்படி இதம் பேசும் வீரனே! யான் பூசும் சந்தனம் முதலான குளிர்ந்த வஸ்துக்கள், இப்போது, உன் மீதுள்ள விரகதாபத்தால், எனக்கு, வெப்பத்தை விளைக்கின்றன. (ஆதலால், முருகா! நீ வந்து என்னைத் தழுவி அருள வேண்டும். ஆனால் வள்ளியிடமும் தேவசேனையிடமும் சல்லாபம் பேசும் நீ, என்னை நிச்சியம் பார்க்கமாட்டாய் என்பது குறிப்பு).


பின் குறிப்பு:

”வள்ளியையும் தெய்வயானையையும் தழுவி, சல்லாபம் பேசும் உனக்கு, என் தாபம் எங்ஙனம் புரியும்? புரிந்துகொள்வதற்கு உனக்கு ஏது நேரம்?” என்று விரகதாபத்தால் தவிக்கும் பெண் கேட்பதாக அமைந்துள்ளது.

திரு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், நயமாக எழுதியுள்ளார்.

வள்ளி, தெய்வயானை இருவரிடத்தும், “எனது ஆவியை ஆண்டருள்” என்று முருகவேள் வேண்டி நிற்க, அவரை நினைத்து ஒரு மங்கை காம வேதனைப் படுகிறாளாம். அந்த மங்கை வேதனைப் படும்போது, பின் வருமாறு புலம்பவும் கூடும் என்று எழுதுகிறார்.

மங்கை குறத்தி வலப்பால் இடத்தை வளைந்து கொண்டாள்

நங்கை கரிப்பெண் இடப்பால் இடத்தை நயந்தணைந்தாள்

இங்கு இம்மடந்தையை எங்கே இருத்தி வைப்பேன் என நீ

அங்கு ஓர் வழி இன்றியோ எனைத் தூர அகற்றினையே?


Comments