கந்தர் அந்தாதி – செய்யுள் 6

செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்

செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த

செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்

செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே


பதம் பிரித்த வடிவம்:

செவ்வந்தி நீல புய முருகா! பத்தர் சித்த மெய்யில்

செவ்வு அந்தி நீ லத்தை உற்று அருள்வாய்; திங்கள் சேய் புனைந்த

செவ்வந்திநீலத்தொருபாகர் போன்றது. இனிச் சிந்தியார்

செ வந்தி நீலத்தின் நீடும் முற்றாத திமிரமுமே

பொருள்:

இப்பாடலில், முருகனை அடைய முடியாது, விரகதாபத்தால் தவிக்கும் பெண், அவன் அணிந்து இருக்கும் மாலையைக் கொடுத்தருள வேண்டும் என்று வேண்டுகிறாள். மேலும், முருகனைத் தியானிக்காதவர்கள் அடையும் துன்பம் (பிறப்பு, இறப்பு சுழற்சி) எப்படிப்பட்டது என்றும் கூறுகிறாள். 

முதலில் முருகனை அழைக்கிறாள்.


செவ்வந்தி நீல புய முருகா!

செவ்வந்திசாமந்தி மலர்

நீலம்நீலோற்பல மலர்

புயதோள்கள்

முருகாமுருகனே

சாமந்தி மாலை, நீலோற்பல மாலை ஆகியவற்றை அழகிய தோளில் அணிந்துள்ள முருகப் பெருமானே! 

அடுத்து, முருகனிடம் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறாள்.


பத்தர் சித்த மெய்யில் செவ்வு அந்தி நீ லத்தை உற்று அருள்வாய் 

பத்தர் - அடியவர்களின்

சித்த மெய்யில்இதயத்தில்

செவ்வு அந்தி பொருந்தி இருந்து

நீ - நீ

லத்தை உற்று கருணைகூர்ந்து

அருள்வாய் – (உனது மாலையை) அருள்வாய்

அடியார்களின் இதயமாகிய இருப்பிடத்தில், நன்கு பொருந்தி இருந்து, கருணைகூர்ந்து அருளும் வல்லமையுள்ள நீ, உனது மாலையினைத் தந்தருள்வாய்.


விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த எனத் தொடங்கும், திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடலில்,  “குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர, குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ?” என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.


அடுத்து, மாலைப் பொழுது பற்றியும், இரவுப்பொழுது பற்றியும் கூறுகிறாள். முருகனைத் தியானிக்காதவர்கள் அடையும் பிறவித்துன்பம், அஞ்ஞான இருள் இவற்றைப் போல் முடிவடையாமல் இரவானது நீண்டுக்கொண்டே போகிறது என்றும் வருத்தப்படுகிறாள். 

திங்கள் சேய் புனைந்த செவ்வந்தி, நீலத்தொருபாகர் போன்றது

திங்கள் சேய்திங்கள்நிலவு; சேய்இளமையான; இள நிலவு

புனைந்ததன்னிடத்தே கொண்ட

செவ்வந்திமாலைப்பொழுது

நீலத்தொருபாகர்நீலிபார்வதி. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமான்

போன்றதுஒப்பது

இள நிலவைத் தன்னிடத்தே கொண்ட, மாலைப்பொழுது, பார்வதி பங்கரான சிவபெருமானைப் போன்றது.

 

இனிச் சிந்தியார் செ வந்தி நீலத்தின் நீடும் முற்றாத திமிரமுமே

இனிஇனிமேல் வரப்போகும் (இரவுப்பொழுது; திமிரம்இரவு)

சிந்தியார்முருகனைத் தியானிக்காதவர்

செஜனனம் (பிறப்பு)

வந்திவருத்தம்

நீலத்தின்அஞ்ஞான இருள் போல்

நீடும்நீடித்து நிற்கும்

முற்றாத - முடிவடையாத

திமிரமுமே இராக்காலம்

இனி வரப்போகும் இரவுப்பொழுதானது, முருகனைத் தியானிக்காதவர்கள் அடையும் பிறவி, வருத்தத்தை விளைவிக்கக்கூடிய அஞ்ஞான இருள் ஆகியவற்றைப் போல் நீடித்துக்கொண்டே, முடிவடையாது இருக்கும்.


பொழிப்புரை:

நிலவுடன் கூடிய மாலைப்பொழுது, பார்வதி பங்கராகிய சிவபெருமான் போல் விளங்குகிறது. தொடர்ந்து வரக்கூடிய இரவுப்பொழுது, முருகனை நினையாதவர்கள் அடையக்கூடிய பிறவித்துன்பம் போலும், வருத்தம் நிறைந்த அஞ்ஞான இருள் போலும் முடிவடையாது நீண்டுகொண்டே இருக்கிறது. ஆதலால், சாமந்தி, நீலோற்பல மாலைகளை, தன் தோளில் அணிந்திருக்கும் முருகா! பக்தர்களின் இதயத்தில் நன்கு பொருந்தி இருந்து அருளக்கூடிய நீ, என் விரகதாபத்தைப் புரிந்து கொண்டு, நீ அணிந்திருக்கும் மாலையை எனக்குக் கொடுத்தருள வேண்டும்.


பின்குறிப்பு:

விரகதாபத்தால் வாடும் பெண்ணிற்கு, முருகனைக் காண முடியாது செய்யும்  இரவுப் பொழுதானது, நீண்டுக்கொண்டே போவது போல் தோன்றுகிறது.

Comments