கந்தர் அந்தாதி - செய்யுள் 3
சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந்
தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே
பதம் பிரித்த வடிவம்:
சென்னி அம் ஓகம் தவிரா அமுதோ கண்? திகிரி வெண்ணெய்ச்
சென்னிய மோகம் பட ஊது எனத் தொனிச் செய்த பஞ்ச
சென்னியமோ கந்தரம்? புனத்தேன் புணர் தேவைத் தெய்வச்
சென்னி அமோகம் பணி பணி ஏரகத் தேமொழிக்கே
பொருள்:
இந்தப் பாடலில், முருகன் பாட்டுடைத் தலைவனாவான். அம்முறையில் அவனது பெருமையும் அவன் எழுந்தருளியுள்ள தலத்தின் சிறப்பும் பேசப்படுகின்றன.
சுவாமிமலையில் வசிக்கும் பெண்ணின் கண், கழுத்து வர்ணிக்கப் படுகிறது. இலக்கணப் படி, காட்சி வியத்தல் என்னும் துறையைச் சார்ந்தது. உவமை அணி பயின்று வருகிறது.
சென்னி அம் ஓகம் தவிரா அமுதோ கண்?
சென்னி – சிரம் / தலை;
சிரசின் மேல்
அம் – கங்கை நீரின்
ஓகம் – ஒலி (ஆரவாரம்)
தவிரா – நீங்காத
அமுதோ – (சிவபெருமான் உண்ட) நஞ்சோ
கண் – இவளது கண்
எப்போதும் ஆரவாரத்தோடு பாயும் கங்கையைத் தன் தலையில் வைத்துக்கொண்டிருக்கும் சிவபெருமான் உண்ட நஞ்சோ இப்பெண்ணின் கண்?
மகர குண்டல மீதே எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில், “மாதேவர் உண் முதிய வெம் கடுவோ?” – பெண்ணின் கண், சிவபெருமான் உண்ட பழைய கொடிய விஷமோ என்று பாடியுள்ளார்.
திகிரி வெண்ணெய்ச் சென்னிய மோகம் பட ஊது எனத் தொனிச் செய்த பஞ்சசென்னியமோ கந்தரம்?
திகிரி – சக்கரம் ஏந்தி
வெண்ணெய் – ஆயர்பாடியில் வெண்ணெயைத் திருடிய
சென்னிய – புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்)
மோகம் பட – தேவர்கள் எல்லாரும் மயங்கி விழ
ஊது எனத் – ஊது எனக் கட்டளை இட
தொனி செய்த – ஒலி
எழுப்பிய
பஞ்சசென்னியமோ கந்தரம் – (திருமாலின் கையில் இருக்கும்) பாஞ்சஜன்யம் எனும் சங்கு இவள் கழுத்தோ?
சக்கரம் ஏந்தியவனும், ஆயர்பாடியில் வெண்ணெயைத் திருடி, குழல் இசைத்து, தேவர்கள் எல்லாரும் அதில் மயங்கி விழ, ஊது எனக் கட்டளை இட, அவ்வாறே ஊதி, சப்தத்தைக் கிளப்பிய திருமாலின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, இவள் கழுத்தோ?
புனத்தேன் புணர் தேவைத் –
புனத் தேன் – தினைப்புனத்தில் வாழும் தேன் போன்றவளான வள்ளியோடு
புணர் தேவை – சேர்ந்த குமரக்கடவுளை
தினைப்புனத்தில் வாழும் தேன் போன்றவளான வள்ளியோடு சேர்ந்த குமரக்கடவுளை
தெய்வச் சென்னி அமோகம் பணி பணி ஏரகத் தேமொழிக்கே –
தெய்வச் சென்னி – தெய்வபக்தி நிறைந்த சோழ மன்னன்
அமோகம் பணி – அதிக ஆசையுடன் வணங்கி
பணி – திருப்பணி செய்த
ஏரக – திருவேரகம் என்னும் சுவாமிமலையில் வாழும்
தேமொழிக்கே – தேன் போன்ற மொழி (வாக்கு) உடைய இப்பெண்ணுக்கு.
இறைவனின் பாதத்தைத் தன் தலையில் வைத்து மகிழும் தெய்வபக்தி நிறைந்த சோழ மன்னன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த திருவேரகம் என்னும் சுவாமிமலையில் வாழும், தேன் போன்ற மொழி (வாக்கு) உடைய இப்பெண்ணுக்கு.
பொழிப்புரை:
சோழ மன்னன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த திருவேரகம் என்னும் சுவாமிமலையில் வாழும் தேன் போன்ற மொழியுடைய இப்பெண்ணுக்கு, சிவபெருமான் உண்ட நஞ்சோ கண்? திருமாலின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் எனும் சங்கோ இவளது கழுத்து?
பின் குறிப்பு:
வேட்டையாடச் சென்ற தலைவன், பொழிலிடை ஊழ்வசத்தால் சந்தித்த பெண்ணைக் கண்டு வியந்து, தன் நெஞ்சுக்குச் சொல்லி வியப்பது காட்சி வியத்தல் எனப்படும்.
உவமை அணி என்பது, ஒரு பொருளை, வேறு ஒரு பொருளோடு ஒப்பிட்டுச் சொல்லுதல். இங்கு, கண்ணிற்கு நஞ்சும், கழுத்துக்கு சங்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.
சுவாமிமலை, செங்கட்சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களுள் ஒன்றோ என்ற ஐயம், பரவலாக உள்ளது. குடவாயில் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொடுத்த தகவலின் படி, சுவாமிமலை, செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் அல்ல என்பதாகும்.
.jpg)
Comments
Post a Comment