கந்தர் அந்தாதி - செய்யுள் 2

செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு

செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே

செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்

செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே 

பதம் பிரித்த வடிவம்:

சே புங்கவ சங்கர பாலக! தெய்வ வாவி அம்பு

சே புங்கவ! சங்கு அரி மருகா! எனச் சின்னம் முன்னே

செப்பு உங்கு அவசம் பெறுவார் (ண்)ணும், தெய்வயானை

(தனச்) செப்பும் கவசம் புனை புயன் பாதம் என் சென்னியதே

பொருள்:

இப்பாடலில், முருகபெருமான் தனக்குப் பாத தீக்ஷை அருளினார் என்று பாடுகிறார்.

சே புங்கவ சங்கர பாலக

சேரிஷபம்

புங்கவபுனிதன்

சங்கரசிவபெருமான்

பாலகமைந்தன்

ரிஷபத்தின் மேல் ஏறி வரும் புனிதனான சிவபெருமானின் மைந்தனே!


தெய்வ வாவி அம்பு சே புங்கவ 

தெய்வதெய்வீகமான

வாவிசரவணப்பொய்கை

அம்புநீர்

சேஉதித்த

புங்கவபுனிதன்

தெய்வீகமான சரவணப்பொய்கை நீரில் தோன்றிய புனிதனே!


சங்கு அரி மருகாபாஞ்சஜன்யம் என்ற சங்கினைக் கையில் ஏந்திய திருமாலின் மருகனே!

முருகனை, மூன்று விதமாக முதலில் அழைக்கிறார்.

1.   சே புங்கவ சங்கர பாலக

2.   தெய்வ வாவி அம்பு சே புங்கவ

3.   சங்கு அரி மருகா

அடுத்து, முருகன், இரண்டு கவசங்களை அணிந்துள்ளான் என்று பாடுகிறார்.

1.   (எனச்) சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் கணும்

(எனச்) சின்னம் முன்னே செப்பு -

சே புங்கவ சங்கர பாலக! தெய்வ வாவி அம்பு சே புங்கவ! சங்கு அரி மருகாஎன்றெல்லாம் விருதுகள் முன்னதாகச் சொல்லி வர

உங்குஅதைக்கேட்டவுடன் அந்த இடத்திலேயே

அவசம் பெறுவார் கணும்தன்னிலை அழிந்து சாந்நித்தியம் அடையும் மாதர்கள் பார்வையையும்

2.   தெய்வயானை தனச் செப்பும்

தெய்வயானையின் கொங்கைகளையும்

கவசம் புனை புயன்சின்னங்கள் ஆர்ப்பதைக் கேட்டு மயங்கிய மாதர்களின் பார்வையையும், தெய்வயானையின் கொங்கைகளையும் கவசமாக அணியும் தோள்களை (புயம்தோள்) உடையவன்.

பாதம் என் சென்னியதேஅப்படிப்பட்ட முருகனின் திருவடி என் தலையின் மீது பதிந்ததே.

பொழிப்புரை:

ரிஷபத்தின் மேல் அமர்ந்து வரும் புனிதனான சிவபெருமானின் மகனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, திருமாலின் மருகனே என்றெல்லாம் சின்னங்கள் முழங்க, அவன் பவனி வரும்போது அவற்றைக் கேட்ட மாத்திரத்தில், தன்னிலை இழந்த மாதர்களின் பார்வயையும், தெய்வயானையின் கொங்கைகளையும் கவசமாகத் தரித்த முருகப்பெருமானின் திருவடி அடியேன் தலைமேல் உள்ளது.

பின் குறிப்பு:

இந்தச் செய்யுளை, மானஸ பூஜையில், முருகன் திருவடி, சென்னியில் உற்றதைக் காட்டும் செய்யுளாக, வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் கொண்டார்.

Comments