கந்தர் அந்தாதி - காப்பு 2 (இதுவுமது) - முருகன்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே
பதம் பிரித்த வடிவம்:
உள் நாம் உலையும் ஐ; மை தா சர் அண் நம் அருணைவெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணாமுலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
“இதுவுமது” என்று இந்தக் காப்புச் செய்யுளுக்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இரு விதமாக எடுத்துக்கொள்ளலாம்.
1.
இதுவும் அது
2. இது உமது
"இதுவும் அது" என்று எடுத்துக்கொண்டால், முதல் காப்புச் செய்யுள் "வாரணத்தானை" போல் இதுவும் ஒரு காப்புச் செய்யுள் என்று ஆகும்.
"இது உமது" என்று எடுத்துக்கொண்டால், இந்தச் செய்யுள்கள் யாவும் இறைவனான உனக்கே உரியது என்று பொருள்படும். "உண்ணாமுலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே" என்ற ஈற்றடியில் முருகனிடம் சரணடைந்து, அவனுக்கே அர்ப்பணித்துவிடுகிறார் அருணகிரிநாதர்.
இந்தப் பாடலில், முதலில் திருமாலின் பெருமையையும், கடலின் தன்மையையும் கூறி, முருகனைப் பற்றிக் கூறுகிறார். பின்னர், திருவண்ணாமலையைப் பற்றியும், அங்கு அமர்ந்து அருளாட்சி புரியும் உண்ணாமுலையம்மையின் பெருமையையும் கூறி, உமையின் மைந்தனே என்று முருகனை அழைத்து, அவனைச் சரணடைகிறேன் என்று பாடுகிறார்.
திருமாலின் பெருமை:
உண் ஆ முலை உ –
உண் – மிகுதியாக உண்ணுகின்ற
ஆ – பசுக்கூட்டங்கள்
முலை – நிறைந்துள்ள முல்லை நிலம்
உ – தலைவன்
மிகுந்த வளம் உள்ளதும், கன்றுகள், பசுக்கள் நன்றாக உண்ணுவதற்கு நிறைய உணவுகளைத் தம்மிடத்தே கொண்டதுமான முல்லை (காடும் காடு சார்ந்த இடம்) நிலத்தின் தலைவனான திருமால்.
கடலின் தன்மை:
மை மைந்து ஆசு அரண்
மை – திருமாலின் கருமை நிறம் உடையதும்
மைந்து – வலிமையை உடைதும்
ஆசு – உவர்ப்புச் சுவை என்னும் குற்றத்தை உடையதும்
அரண் – (அசுரர்களுக்கு) பாதுகாப்பு தரும் கோட்டையாக இருப்பதுமாகிய கடல்
முருகனின் பெருமை:
அம்பரர் உயிர் சேர் உள் நாம் உலையும் ஐ –
அம்பரர் - அசுரர்களின்
உயிர் – உயிரை
சேர் – மாய்த்து
உள் – தேவர்களின் உள்ளத்தில் இருக்கும்
நாம் – அச்சத்தை
உலையும் – நீக்கும்
ஐ – கடவுளான முருகன்
கடலில் ஒளிந்துக்கொண்டு, தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரர்களின் உயிரைப் போக்கி, தேவர்களின் உள்ளத்தில் இருந்த அச்சத்தை நீக்கி அருளிய கடவுளான முருகனே!
உண் ஆ முலை உ மை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர் சேர்
உள் நாம் உலையும் ஐ
திருமாலின் நிறத்தையும், வலிமை, உவர்ப்புச் சுவை உடையதும், அசுரர்களுக்குப் பாதுகாப்புக் கோட்டையாக திகழ்வதுமான கடலில் ஒளிந்துக்கொண்டு, தேவர்ளுக்குத் துன்பம் தந்த அசுரர்களின் உயிரை மாய்த்து, தேவர்களின் உள்ளத்தில் இருந்த அச்சத்தை நீக்கி அருளிய கடவுளான முருகப் பெருமானே!
அருணாசலத்தின் பெருமை:
மை தா சர் அண் நம் அருணை வெற்பு
மை – ஆட்டுக் கடா
தா - ஏறுதல்
சர் – வெப்பம் உடைய அக்னி
அண் - சேருதல்
நம் – நாம் அடையக்கூடிய
அருணை வெற்பு – அண்ணாமலை
1. ஆட்டுக்கடாவின் மேல் வலம் வருபவனும், வெம்மை உடையவனுமான அக்னி தேவன் குளிர்ந்ததால் வந்த மலை
2. மன்னுயிர் எல்லாம் அடைக்கலம் என்று அடையக்கூடிய மலை
உண்ணாமுலை அம்மை பெருமை:
· அருணை வெற்பாள் – மேலே கூறப்பட்ட பெருமை உடைய அண்ணாமலையில் அமர்ந்து அருள் புரிபவள்
· உண்
ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில் உண்ணாமுலை உமை
o உண் ஆம் முலையும் – மிகுதியாய்ப் பெருகும் கற்பும்
o ஐ மை தா சர நந்தனமும் – அழகியதும் (ஐ), மை தீட்டப்பட்டதும் (மை), காதுகள் வரை நீண்டதுமான (தா) கண்களில் (சர) எழும் கருணையும் (நந்தனம்)
o ஒப்பில் – மேற்கூறப்பட்ட கற்புக்கும் கருணைக்கும் இணை இல்லாதவள்
o உண்ணாமுலை உமை – திருவண்ணாமலையில் உண்ணாமுலை என்னும் பெயர் கொண்டு வீற்றிருக்கும் பார்வதி.
மைந்தா சரணம் சரண் உனக்கே -
உமையாளின் மைந்தனே, உன்னைச் சரணடைகிறேன்.
பொழிப்புரை:
திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும், உவர்ப்பும் உடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து, தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே! அக்கினியின் சொரூபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாக்ஷத்திற்கும் கற்புடைமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதி தேவியின் குமாரனே! நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.
கந்தர் அந்தாதி காப்புச் செய்யுள் 2 விளக்கவுரை காணொளி
.jpg)
Coming to know new words in Tamil. Also even a single letter has a meaning in Tamil is really amazing.
ReplyDeleteWonderful.
ReplyDelete