கந்தர் அந்தாதி - காப்பு 1 (விநாயகர்)
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைதுவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
பதம் பிரித்த வடிவம்
வாரணத்தானை, மகத்து வென்றோன் மைந்தனை; துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை; வயல் அருணை
வாரணத்தானைத் திறை கொண்ட யானையை வாழ்த்துவனே
விநாயகரை, மூன்று விதமாக, அருணகிரிநாதர், இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
- வாரணத்தானை, அயனை, விண்ணோரை, மலர்க்கரத்து வாரணத்தானை, மகத்து வென்றோன் மைந்தன்
- துவச வாரணத்தானைத் துணை நயந்தான்
- வயல் அருணை வாரணத்தானைத் திறை கொண்ட யானை
1. வாரணத்தானை, அயனை, விண்ணோரை, மலர்க்கரத்து வாரணத்தானை, மகத்து வென்றோன் மைந்தனை
- வாரணத்தானை – வாரணம் என்பது, இங்கு, ஐராவதத்தைக் குறிக்கிறது. ஐராவதம் என்னும் வெள்ளை யானையை உடைய இந்திரன், வாரணத்தான் எனப்படுகிறான்.
- அயனை – அயன் – பிரம்மன்
- விண்ணோரை – விண்ணோர் – தேவர்கள்
- மலர்க்கரத்து வாரணத்தானை – தாமரை போன்ற கையில் சங்கினை ஏந்தி இருக்கும் திருமால்.
- மகத்து வென்றோன் – சிவன்
மகம் – தக்ஷ யாகம். இந்திரன், பிரம்மன், தேவர்கள், திருமால் ஆகியோர், தக்ஷன் நடத்திய யாகத்தில் பங்கேற்றனர். சிவபெருமானை அழைக்காமல், தக்ஷன் யாகத்தை நடத்தி, அவரை அவமானப் படுத்த நினைத்தான். அதற்கு, இவர்கள் எல்லாரும் துணை நின்றனர். அதனால், வீரபத்திரரைக் கொண்டு, அந்த யாகத்தை அழித்து, தேவர்கள், இந்திரன், பிரம்மன், திருமால் ஆகியோரைத் தண்டித்து, சிவபெருமான் வெற்றி கொண்டார். அதனால், மகத்து வென்றோன் என்று அழைக்கப்படுகிறார். அத்தகைய வீரம் உடைய சிவபெருமானின் மகன் என்று விநாயகரை அருணகிரிநாதர் பாடுகிறார்.
“அதி மதம் கக்க” எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில், தக்ஷ யாகத்தில் நடந்தனவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.
கனல் தலம் புக்குச், சக்ரம் எடுக்கும்
கடவுளும், பத்மத் தச்சனும் உட்கும்படி மோதிக்,
கதிரவன் பல் குற்றிக், குயிலைத்
திண் சிறகு அரிந்து, எட்டுத்திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப்பட்டு ஒழியக் கொன்று,
பரிவு ஒழிந்து, அக்கிக்கு உட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டு ஒழியத் தன் செவிபோய்
முனிந்து அற்றைக் கொற்றம் விளைக்கும் பரமர்
பொருள்:
நியதிப்படி ஏற்பாடுகள் செய்து வேள்வி நடந்த தக்ஷனின் யாகசாலையினுள் நுழைந்து, சக்கரம் ஏந்திய திருமாலும், பிரம்மனும் அஞ்சும் படித் தாக்கியும், சூரியனின் பற்களை உடைத்தும், குயிலாய் மாறிய இந்திரனின் வலுவான சிறகை வெட்டியும், அஷ்ட திக் பாலகர்கள் தம் சேனைகள் அழியுமாறு கொன்றும், அழகும் பதிவிரதமும் உடைய தாக்ஷாயணி என்ற நாமம் கொண்ட தன் மனையாள் பார்வதியின் வருத்தம் தீரவும், அக்னியில் விழுந்த தக்ஷன் அவமானப் பட்டு ஒழியவும், கலைமகளான சரஸ்வதி, தன் மூக்கை இழந்து வெட்கும் படியாகக் கோபித்து, அன்று வெற்றி பெற்ற சிவபெருமான்.
2. துவச வாரணத்தானைத் துணை நயந்தானை
- துவசம் - கொடி.
- துவச வாரணம் - கோழிக்கொடி.
- சேவல் கொடியைக் கையில் ஏந்திய முருகன் – துவச வாரணத்தான்.
முருகனை, சகோதரனாகக் கொண்ட விநாயகரை, துவச வாரணத்தானைத் துணை நயந்தான் என்கிறார்.
3. வயல் அருணை வாரணத்தானைத் திறை கொண்ட யானையை
வயல் சூழ்ந்த அருணை (திருவண்ணாமலை) என்னும் தலத்தில், கஜமுகாசுரனை வெற்றி கொண்ட யானை முகக் கடவுள் என்று பாடுகிறார்.
இதற்கு, இன்னொரு பொருளும் பெரியோர்கள் கூறுவார்கள்.
“சோண சைல மாலை” என்னும் நூலில் உள்ள காப்புப் பாடலில், திருவண்ணாமலையில் உள்ள விநாயகர், யானை திறை கொண்ட வரலாறு கூறப்படுகிறது.
மதுரமொழி அன்பர் மனமாம் – குதிரைதிறை
கொண்டவனென் றேத்தும் குரைகழற்கால் யானைதிறை
கொண்டவனை என்னுளத்தே கொண்டு”
முகிலன் என்னும் அரசன், அடியார்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். குகை நமச்சிவாய தேசிகர் என்னும் அடியார், அருணாசலேஸ்வரரைத் துதித்தார்.
ஆலம் உண்ட காலத்து அருள் இருக்க
மேலே எரித்த விழி இருக்க
இந்நாட் சோணேசர் தரித்தது என்ன காரணமோ தாம்?
இவ்வாறு அவர் பாடியதும், சிவபெருமானின் கட்டளையால், விநாயகர், யானை உருவில், முகிலனின் கனவில் சென்று, அவனுக்கு, அச்சத்தை விளைவித்தார். பின்னர், முகிலன், தன் தவற்றை உணர்ந்து, அடியார்களுக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்தினான். பிராயச்சித்தமாக, யானைகளை, திருவண்ணாமலையில், மூலவர் சந்நிதி அமைந்திருக்கும் மண்டபத்திற்கு வெளியே, இடது புறத்தில் உள்ள ஒரு விநாயகருக்குக் காணிக்கையாக செலுத்தினான். அதனால், “யானை திறை கொண்டவர்” என்று அந்த விநாயகருக்குப் பெயர் ஏற்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த விநாயகப் பெருமானை வணங்குகிறேன் எனப் பாடுகிறார்.
பொழிப்புரை:
இந்திரனையும், பிரம்மனையும், திருமாலையும், தேவர்களையும் தக்ஷ யாகத்தில் வென்ற பெரியோனான சிவபெருமானின் மகனும், சேவலைக் கொடியாக ஏந்தியுள்ள முருகப் பெருமானின் சகோதரனும், வயல் சூழ்ந்த அண்ணாமலையில் கஜமுகாசுரனை வென்றவனுமான (அல்லது முகிலன் என்னும் அரசனிடமிருந்து யானைகளை திறையாக கொண்டவனுமான) விநாயகப் பெருமானை வணங்குகிறேன்.
கந்தர் அந்தாதி காப்புச் செய்யுள் 1 - விளக்கவுரை:
.jpg)
அருமை. I am happy that you have chosen to blog. This is more accessible to people. Congratulations and wish you all the best.
ReplyDeleteஅருமை. விரிவுரை பிரமாதம். I am happy that you have chosen to blog, as this is more accessible to people.
ReplyDelete