இருப்பவல் திருப்புகழ்
"இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும்....." (திருத்தணி திருப்புகழ்)
இப்பாடலில் வரும் 'இருப்பவல்' எனும் சொல்லை "இரும்பு அவல்" என்று சிலர் பிரித்துப் படிப்பர். இது, சரியான கருத்து அல்ல. தொடர்ந்து வரும் "விருப்பொடு படிப்பவர்" என்ற சொற்றொடரைக் கவனிக்க வேண்டும். இரும்பு அவலாக இருந்தால் திருப்புகழை யார் விருப்பொடு படிப்பார்கள்? எனவே, "இருப்பு அவல்" என்று கொள்வதே சரியான முறையாகும். கையிருப்பாகச் சேமித்து வைத்திருக்கும் அவல் என்பது பொருள்.
அவல் மிகவும் சுலபமான உணவு என்பதால், நீர், பால் அல்லது மோரில் ஊறவைத்து உண்ணலாம். வெல்லம் கலந்து உண்ணலாம். மீட்டும் பக்குவம் செய்து புளி அவல், வெல்ல அவல், எலுமிச்சை அவல் அல்லது அவல் பாயசம் என்ற உருவங்களில் உண்ணலாம்.
பல நாள் பயணம் செய்து துவாரகையை அடைந்த குசேலர், நீண்ட நாள் கெடாமலிருக்கும் அவலைத்தானே கண்ணனுக்காக எடுத்துச் சென்றார்!
திருப்புகழ், கையிருப்பிலே உள்ள அவல் போன்றது. தனி அவலைச் சுவைப்பது போல இசையின்றிப் பாடலாம்; ஊற வைத்த அவலைப் போல் இசையோடு பாடலாம்; பக்க வாத்தியங்களோடு பெரிய கச்சேரியாகச் செய்யலாம் - அவல் பாயசம் செய்வது போல்!
"குசேலர் கண்ணனுக்கு அளித்தது நெல் அவல்; அருணகிரிநாதர் நமக்கு அளித்தது சொல் அவல்" என்பார் வாகீச கலாநிதி அமரர் கி.வா.ஜ அவர்கள். எவருக்குமே காலன் ஊருக்குச் செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் திருப்புகழ்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நவமணி நூல்களிலுள்ள பாக்களைப் பற்றிப் பேசும் இந்த வலைப்பூவிற்கு "இருப்பவல் திருப்புகழ்" என்று பெயர் சூட்டியிருப்பது பொருத்தம் தானே!
முருகா சரணம்!
இருப்பவல் திருப்புகழ் பற்றிய சிறப்புரை காணொளி:
இங்கே அழுத்தவும்.jpg)
அருமையான தகவல். "இருப்பவல் திருப்புகழ்" அழகிய தலைப்பு. நல்லதொரு தொடக்கம். தொடர்ந்து பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
ReplyDelete