வாதவூரன் அடிமைக்கொளு க்ருபைக் கடவுள்

முருகா சரணம்.

இன்று (12.09.2024) ஆவணி மூலம்

மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை ஈசன் நடத்திய நன்னாள்.

* திரைவஞ்ச இருவினைகள் என்று தொடங்கும் பொதுத் திருப்புகழில் இது பற்றிய குறிப்பு வந்துள்ளது.

பரி என்ப நரிகள் தமை நடனம் கொடு ஒரு வழுதி

..பரிதுஞ்ச வரு மதுரை நடராஜன்

குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகளை, ஓரிரவில் இறந்துபடும்படியாக (குதிரை உருவம் மறைந்து, மீண்டும் நரிகளாக அவற்றை மாற்றி) எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான்.

ஒலிவடிவ உரை:


இப்பாடலைத் தவிர வேறு பாடல்களில் வரும் இத் திருவிளையாடல் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு:

* கரிமுகக் கடகளிறு - திருவண்ணாமலைத் திருப்புகழ்

 நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்

..கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்

நரியின் பெரிய கூட்டங்களை கடிவாளத்தைக் கையிலே பிடித்து, பாண்டியனின் எதிரே நடத்திய சொக்கேசர் (சிவபிரான்).

ஒலிவடிவ உரை:


கரிமுகக் கடகளிறு பொருளுரை காணொளி:


* ஆசை நாலு - பழமுதிர்சோலைத் திருப்புகழ்

வாசி வாணிகன் எனக் குதிரை விற்று மகிழ்

     வாதவூரன் அடிமைக்கொளு க்ருபைக் கடவுள்

          மாழை ரூபன் முக மத்திகை விதத்து அருண செம் கை ஆளி 

குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சி கொண்ட, திருவாதவூரராகிய மாணிக்கவாசகரை அடிமையாகக் கொண்ட கருணா மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த ஒளிவீசும் செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமான்.

ஒலிவடிவ உரை:


அலகிலா விளையாட்டுடை ஈசன் ஆலவாய்ப் பதியில் குதிரைப் பரிவர்த்தனை‌ முறைகேட்டில் அரச தண்டைனைக்கு உள்ளான‌ வாதவூரருக்காக வறண்ட வைகையில், வரம்பு மீறி வெள்ளம் பெருகி வரச்செய்து, பின் வெள்ளத்தைத் தடுக்க கரை எழுப்பும் பொருட்டு மண் சுமந்து, உதிர்ந்த பிட்டைக் கூலியாகப் பெற்றார்.

 

நம் இசைவழிபாடு புத்தகத்தில் இல்லாத ஒரு மூன்று திருப்புகழ்ப் பாக்களில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பற்றிய குறிப்பு வருகிறது. அவற்றையும் அறிந்து கொள்வோம்.


1. சீத வாசனை - மதுரைத் திருப்புகழ்

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என

     ஞான பாதம் வெளியிட்டு, நரி யிற்குழுவை

          வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண


மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை

     ஆறின் மீது நடமிட்டு மண் எடுத்து மகிழ்

          மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன்

திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக்கொண்டு, குரு மூர்த்தியாக நின்று, ஞான மார்க்கத்தை உபதேசித்து, நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு, பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட, பொன்னாடையைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்து, வைகையாற்றங்கரை மீது கூத்தாடி, ஆற்றில் அணைகட்ட மண் சுமந்து மகிழ்வுற்று, மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டு விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான்.


இப்பாடலில், நரியைப் பரியாக்கிய திருவிளையாடலும், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் வருகின்றன.


2. பாசத்தால் விலை - பழமுதிர்சோலை‌ திருப்புகழ் 

கூடற்கே வைகையில் கரை கட்டிட ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடி படுவோன்

மதுரையில் வைகையாற்றில் கரை எழுப்பிட ஒப்புக்கொண்டு கூலியாக உதிர்ந்த பிட்டை வந்தி என்ற மூதாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டு, சரியாக வேலை செய்யாததால் அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்பால் அடிபடும் ஈசன்.



3. வாட்டியெனை - திருக்கூடலையாற்றூர்

வேற்று உருவில் போந்து மதுரா புரியில் ஆடி வைகை

ஆற்றின் மணல் தாங்கும் மழுவாளி என தாதை

மாறு வேடம் பூண்டு மதுரையில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, வைகை ஆற்றில் மண் சுமந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையுமான சிவபெருமான்.

Comments

Post a Comment