கந்தர் அந்தாதி – செய்யுள் 5

தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ

தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா

தித்தவித் தார முடையா ரருள்வெள்ளம் தேக்கியன்பு

தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனலே


பதம் பிரித்த வடிவம்:

தித்த வித்தார மன் நித்தரைத் தேவர் வணங்க முன்

(போ)தித்த வித் தாரகை மைந்தர்; செந்தூர்க் கந்தர்; சிந்துர

()தித்த வித் தாரம் உடையார்; அருள் வெள்ளம் தேக்கி, அன்பு

()தித்து, அவித்தார்; அம் தனி வீடு உறத் துக்கச் செ அனலே

 

பொருள்: 


தித்த வித்தார மன் நித்தரைத் தேவர் வணங்க முன் போதித்த வித் தாரகை மைந்தர்

இவ்வரிகளில், சிவபெருமானின் பெருமையை முதலில் கூறி, அவருக்கு, முருகன் உபதேசம் செய்ததைப் பாடுகிறார்.


சிவபெருமானின் பெருமை:

தித்த வித்தார மன் நித்தர்

தித்ததித்த என்னும் தாள ஜதி

வித்தாரவிரிவுகளை

மன் – (தன் நடனத்தின் மூலம்) நிலைபெறச் செய்யும்

நித்தர்அழிவில்லாத, ஆடல் வல்லானாகிய நடராஜ பெருமான்

தித்த என்னும் தாள ஜதிகளின் விரிவுகளை, நிலைத்த புகழ் உடைய தன் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆடலரசன்.


முருகன் ப்ரணவோபதேசம் செய்த பெருமை:

தேவர் வணங்க முன் போதித்த 

தேவர்மேற்கூறிய நடராஜ பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாரும்

வணங்கதுதிக்கும் படியாக

முன்முன்னொரு காலத்தில் (சுவாமிமலையில்)

போதித்தஉபதேசித்த

நடராஜப் பெருமானுக்கு, தேவர்கள் வணங்க, முன்னொரு காலத்தில், சுவாமிமலையில் உபதேசித்த


முருகனைப் பற்றி மேலும் பாடுகிறார்.

·         வித் தாரகை மைந்தர்

வித் தாரகைபெருமை மிகுந்த கார்த்திகைப் பெண்கள் (தாராநட்சத்திரம்) [அம்பா, துலா, நிதந்தி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்திகார்த்திகை மாதர்களின் பெயர்கள்]

மைந்தர்புதல்வரும்


தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரு முலைப்பால்

ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன்

(கந்தர் அலங்காரம் 81) 


உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்

ஒருவர் ஒருவர்க்கு அவண் ஒர் ஓர் புத்ரன் ஆனவனும்

[வேடிச்சி காவலன் வகுப்பு]

 

கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் ஒரு உருவமாக இருந்த முருகனுக்குப் பால் ஊட்ட நினைத்த போதும் அந்த மாதர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த இடத்திலே ஓரோர் புத்திரன் ஆனவனும் (வேடிச்சி காவலனே) 

·         செந்தூர்க் கந்தர்

செந்தில் ஆண்டவரும்

·         சிந்துர ஆதித்த வித்தாரம் உடையார்

சிந்துரநெற்றிப் பொட்டு

ஆதித்தசூரியனைப் போல் ஒளிவீசும்படித் தரித்துள்ள

வித்தாரம் உடையார்வள்ளி, தெய்வயானை எனும் அற்புதமான இரண்டு தேவிமார்களை உடையவருமான கந்தப் பெருமான்

நெற்றியில், சூரியன் போல் ஒளி வீசும் திலகம் அணிந்த வள்ளி, தெய்வயானை எனும் அற்புதமான இரண்டு தேவிமார்களை உடையவருமான கந்தப் பெருமான்


அடுத்து, முருகன், நமக்காக என்ன செய்தார் என்று பாடுகிறார்.

அருள் வெள்ளம் தேக்கி, அன்பு உதித்து அவித்தார் அம் தனி வீடு உற துக்கச் செ அனலே

1.   அருள் வெள்ளம் தேக்கிதன் கருணையை உள்ளத்தில் நிரப்பி

2.   அன்பு உதித்துபக்தியை மூளும் படிச் செய்து

3. அவித்தார் துக்கச் செ அனலே – (செபிறப்பு) பல துன்பங்களைத் தருகின்ற பிறப்பு எனும் தீயை அவியச் செய்தார்.

4. அம் தனி வீடு உறஒப்பற்ற முக்திப்பேற்றை நாம் அடைவதற்கு (வழிவகுத்தார்). 


ஒரு பூதரும் அறியாத் தனிவீடு (கந்தர் அலங்காரம் 45)

[பஞ்ச பூதத்தால் ஆன பூத உடல் உடையவர்களால் அறியவொணாத வீடு]


நம் உள்ளத்தில், அவரது கருணையை நிரப்பி, அவர்மேல் பக்தியை வளரச் செய்து, துயரைத் தரும் பிறப்பு என்னும் தீயை அணைத்து, நாம் உயர்வான வீடு பேற்றை அடையும்படிச் செய்தார். 


பொழிப்புரை:

தேவர்கள் வணங்குமாறு, ஈசனுக்கு ப்ரணவோபதேசம் செய்தவரும், க்ருத்திகா புத்திரரும், செந்திலாண்டவரும், வள்ளி தெய்வயானை நாயகருமான குமரக்கடவுள், நம் பிறப்பாகிய அனலைத் தன்னுடைய க்ருபா நதியின் மூலம் அவித்து, நாம் மோக்ஷ வீடு அடையும்படிச் செய்தார்.

Comments

Post a Comment