கந்தர் அந்தாதி – அறிமுகம்
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்று உரைத்தார் எம் தாய் அருணகிரிநாதர். தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள், அருணகிரிநாதரைப் பற்றியும் அவர் அருளிய திருப்புகழ், திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை, கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல்-மயில்-சேவல் விருத்தங்கள் ஆகிய நவமணி நூல்களையும் நன்றாக அறிந்திருப்பார்கள்.
இவற்றுள் கந்தர் அந்தாதி, ஒரு சிலரால் மட்டுமே கையாளப்பட்டுவருகிறது. காரணம், இந்நூல், வில்லிபுத்தூரார் எனும் புலவருடன் போட்டி ஏற்பட்டுப் பாடப்பட்டதால், நூல் முழுவதும் யமக அந்தாதியில் அமைந்துள்ளது. பொருள் விளக்கம் தருவதும் கடினமானது. எப்படி ஒரு தேங்காயின் கடுமையான ஓட்டினை உடைத்து, அதற்குள் இருக்கும் சுவையான இளநீரைப் பருகுகிறோமோ, அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு, இந்நூலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கந்தர் அந்தாதியில் இரண்டு காப்புச் செய்யுள்கள் உண்டு. அவற்றில் திருவண்ணாமலைத் தலம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவ்விரண்டு செய்யுள்களைத் தவிர, மற்ற நூறு செய்யுள்களும் சி,சீ,செ,சே,தி,தீ,தெ,தே என்னும் எட்டு எழுத்துகளிலேயே தொடங்குகின்றன என்பது இதன் தனிச்சிறப்பு.
கந்தர் அந்தாதியில், திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, வள்ளிமலை, பொதியமலை, சீர்காழி, திருவோத்தூர், இலஞ்சி, திருவலம், திருவரங்கம் முதலிய தலங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
மேலும் சிவபெருமான், உமையம்மை, விநாயகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, பிரம்மன், திருமால், ஆதிசேடன், இந்திரன், அக்னி, யமன், தேவர்கள், அசுரர்கள், திருஞானசம்பந்தர், நக்கீரர், முருகப்பெருமானின் வேல், மயில், சேவல் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. அகப்பொருட் பாடல்கள் சிலவும் வருகின்றன.
பெரும் புலமை வாய்ந்தவரும், தம்மோடு வாதம் செய்து தோற்றவரின் காதினைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தைத் தம் கல்விச் செருக்கால் கையாள்பவருமான வில்லிபுத்தூராருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒரு தர்க்கம் உண்டாயிற்று. அப்போது, ஆசு கவியாய், அருணகிரிநாதர், இந்தக் கந்தர் அந்தாதியைப் பாடினார். ஒவ்வொரு செய்யுள் முடிந்தவுடன் வில்லிபுத்தூரார் விளக்கம் கூறி வந்தார். “திதத்தத் தத்தித்தத்” எனத் தொடங்கும் 54 ஆவது கந்தர் அந்தாதிச் செய்யுளை அருணகிரியார் பாடிய போது, வில்லிபுத்தூராரால் விளக்கம் சொல்ல முடியவில்லை. அதற்கு, அருணகிரிநாதரே விளக்கம் கூறினார். இதைத்தொடர்ந்து வந்த 46 செய்யுள்களுக்கும் வில்லிபுத்தூரார் விளக்கம் கூறி முடித்தார். இத் தர்க்கத்தில், பாட முடியாமலோ உரை கூறமுடியாமலோ தோல்வியுற்றவரின் காதினை மற்றொருவர் அறுப்பதாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தால், வெற்றி பெற்ற அருணகிரிநாதர், வில்லிபுத்தூராரின் காதினை அறுக்கலாம். ஆனால் அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. வில்லிபுத்தூராரிடம், கருணைக்குப் புறம்பான இந்த வழக்கத்தை இனி விட்டுவிட வேண்டும் என்று கூறி, அவரிடம் இருந்த குறட்டினை வீசி எறிந்தார். “கருணைக்கு அருணகிரி” என்ற பெயர் நிலைத்தது.
தணிகை உலா, திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கந்தர் அந்தாதி தலைப்புகள் அட்டவணை (குறுந்தொகுப்பு)
| பாடப்பட்ட தலங்கள் / தலைப்புகள் | செய்யுள்கள் எண்ணிக்கை | செய்யுள் எண்கள் |
|---|---|---|
| திருவண்ணாமலை | 2 | காப்பு 1, காப்பு 2 |
| திருப்பரங்குன்றம் | 2 | 1, 56 |
| திருச்செந்தூர் | 26 | 1, 5, 13, 14, 23, 24, 33, 34, 35, 38, 42, 48, 58, 61, 62, 65, 70, 71, 86, 87, 88, 90, 91, 93, 94, 95 |
| பழநி | 3 | 1, 22, 64 |
| சுவாமிமலை | 3 | 1, 3, 91 |
| திருத்தணி | 7 | 1, 9, 29, 26, 59, 91, 92 |
| பழமுதிர்சோலை | 2 | 1, 73 |
| திருச்செங்கோடு | 11 | 23, 26, 41, 42, 56, 67, 68, 78, 82, 90, 91 |
| வள்ளிமலை | 4 | 8,11,17,74 |
| பொதியமலை | 1 | 19 |
| சீர்காழி | 2 | 29, 100 |
| திருவோத்தூர் | 1 | 75 |
| இலஞ்சி | 2 | 81,91 |
| திருவலம் | 1 | 91 |
| திருவரங்கம் | 3 | 90, 94, 98 |
| திருஞானசம்பந்தர் | 6 | 27, 29, 56, 65, 75, 96, 100 |
| நக்கீரர் | 1 | 54 |
| மாமரம் தடிதல் - சூரபத்மன் | 10 | 11, 32, 40, 51, 57, 76, 80, 84, 85, 87 |
.jpg)
Very informative. Table covering various topics in kandhar andhadhi is really interesting.
ReplyDelete